வடமாநிலங்களில் இருந்து கோவை, கேரளாவுக்கு கஞ்சா சப்ளை: ரயிலில் கடத்தி வரப்பட்ட 63 கிலோ கஞ்சா பறிமுதல்…மேற்கு வங்க இளைஞர் கைது..!!
Author: Rajesh26 April 2022, 5:04 pm
கோவை: வடமாநிலத்திலிருந்து கோவை வழியாக வந்த ரயிலில் கடத்தி வந்த சுமார் 63 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்து, மேற்கு வங்க வாலிபரை கைது செய்தனர்.
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் போதை பொருட்களை தடுக்கும் வகையில் ஆபரேஷன் 2.0 தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி தமிழகம் முழுவதும் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக வடமாநிலங்களில் இருந்து கோவை வழியாக கேரளா செல்லும் ரயில்களில், இருப்புப்பாதை போலீசார் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சாலிமாரிலிருந்து – திருவனந்தபுரம் செல்லும் விரைவு ரயில் இன்று காலைதிருப்பூரை தாண்டி கோவை வந்து கொண்டிருந்தது.
அப்போது கோவை ரயில்வே இருப்புப்பாதை ஆய்வாளர் சிவகாமி ராணி தலைமையில், உதவி ஆய்வாளர் ராமன் உள்ளிட்ட போலீசார் ரயிலில் சோதனை மேற்கொண்டனர். அப்போது D1 கோச்சில் 12வது இருக்கையின் அடியில் நிறைய பொட்டலங்கள் இருந்துள்ளது.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் பொட்டலங்களை பிரித்து பார்த்தபோது அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரயிலில் பயணித்து வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த சுசில்முண்டா (39) என்பவரை பிடித்த போலீசார், கோவை ரயில்வே இருப்புப்பாதை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர் கோவை மற்றும் கேரளாவிற்கு கஞ்சாவை விற்பனைக்கு எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 63 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா யாருக்கு விற்பனை செய்ய கொண்டு வந்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.