திமுக ஒன்றிய குழு தலைவர் வீட்டின் அருகே பெட்ரோல் குண்டு?.. பின்னணியில் திட்டமிட்ட சதியா?..

Author: Vignesh
23 August 2024, 4:04 pm

செங்குன்றம் அருகே திமுக ஒன்றிய குழு பெருந்தலைவர் வீட்டின் அருகே பெட்ரோல் நிரப்பப்பட்ட கேன்களில் பேட்டரி இணைத்து வைக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு. பெட்ரோல் குண்டு வீச முயற்சியா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த புள்ளிலைன் பகுதியைச் சேர்ந்தவர் திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் திருமால். இவரது மனைவி தங்கமணி திருமால் புழல் ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவராக பொறுப்பு வகுத்து வருகிறார். இன்று நண்பகல் இவரது வீட்டின் வெளியே கழிவு நீர் செல்லும் கால்வாயின் மீது மூன்று கேன்களில் பெட்ரோல் நிரப்பப்பட்டு டேப்பால் சுற்றி பேட்டரியுடன் இணைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த செங்குன்றம் காவல்துறையினர் பேட்டரியுடன் பெட்ரோல் நிரப்பப்பட்ட கேன்களை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசுவதற்காக தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டதா அல்லது யாரையேனும் அச்சுறுத்துவதற்காக இதுபோன்ற செயல்களில் மர்ம நபர்கள் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திமுக ஒன்றிய குழு பெருந்தலைவர் தங்கமணி திருமால் குடும்பத்துடன் வெளியே சென்று இருந்த நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அண்மையில் சுதந்திர தினத்தன்று சோழவரத்தில் திமுக பிரமுகர் வீடு உட்பட இரண்டு இடங்களில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சூழலில் தற்போது திமுக ஒன்றிய குழு பெருந்தலைவர் வீட்டின் அருகே பெட்ரோல் குண்டு போல கேன்களில் பெட்ரோல் நிரப்பப்பட்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!