இனி பைக்கே ஓட்ட முடியாது? டிடிஎஃப் வாசன் மீது அடுத்த அதிரடி… போக்குவரத்து போலீசார் நடவடிக்கை!!!
Author: Udayachandran RadhaKrishnan19 September 2023, 8:22 am
இனி பைக்கே எடுக்க முடியாது? டிடிஎஃப் வாசன் மீது அடுத்த அதிரடி… போக்குவரத்து போலீசார் நடவடிக்கை!!!
தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமாக இருக்கும் யூடியூபர்களில் ஒருவர் டிடிஎஃப் வாசன். இளைஞர்கள் மத்தியில் இவரது யூடியூப் சேனல் ரொம்பவே பிரபலம்.. கோவையைச் சேர்ந்த இவர் தொடர்ச்சியாக அவர் பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.
அதிவேகமாக வாகனம் ஓட்டி, அதை சமூக வலைத்தளங்களிலும் இவர் தொடர்ச்சியாகப் பதிவிட்டு வருகிறார். அனுமதிக்கப்பட்ட வேகத்தைத் தாண்டி மிக வேகமாக பைக் ஓட்டும் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வந்தனர்.
இந்தச் சூழலில் தான் நேற்று அவர் விபத்து ஒன்றில் சிக்கினார். சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே பைக்கில் ஸ்டண்ட் செய்ய முயன்ற போது விபத்தில் சிக்கினார்.
சுஸுகி ஹயபுசா வகை பைக்கில் பயணித்த அவர் வீலிங் செய்ய முயன்றுள்ளார். அப்போது திடீரென நிலைதடுமாறிய அவர் அருகில் இருக்கும் பள்ளத்தில் விழுகிறார். இந்த விபத்தில் டிடிஎஃப் வாசனுக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.
அதிவேகமாகச் செல்லும் போது அவர் வீலிங் செய்ய முயன்ற நிலையில், அவரது பைக் நிலைதடுமாறி இரண்டு முறை தலைக்குப்புற சுற்றி பள்ளத்தில் விழுந்தது.. இதனால் அவருக்குக் கையில் காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என அவரது பாலோயர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இதற்கிடையே யூடியூபர் டிடிஎப் வாசனின் ஒட்டுநர் உரிமத்தை ரத்து செய்யத் தமிழ்நாடு போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது..
காஞ்சிபுரத்தில் வீலிங் செய்தபோது நடந்த விபத்தில் டிடிஎப் வாசன் காயமடைந்த நிலையில், போக்குவரத்து ஆணையரகம் இந்த பரிந்துரையை அளித்துள்ளது. மோட்டர் வாகன சட்டப்படி பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஒட்டியதாக டிடிஎப் வாசன் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாகனத்தை அஜாக்கிரதையாக ஒட்டியது உட்பட 2 பிரிவுகள் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்து குறித்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், அந்த வீடியோவை போதிய ஆதாரமாக வைத்து இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மோட்டர் வாகன சட்டம் 19இன் படி லைசென்ஸ் வழங்கும் அதிகாரிக்கு அதை ரத்து செய்யும் அதிகாரமும் இருக்கிறது..
இந்தச் சட்டம் ஒருவர் குற்றம் செய்ததற்கான ஆதாரம் இருந்தால் லைசென்ஸை ரத்து செய்யும் அதிகாரத்தைச் சம்மந்தப்பட்ட அதிகாரிக்கு அளிக்கிறது.. இதற்கிடையே டிடிஎப் வாசன் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை ஒட்டியதற்கான ஆதாரம் இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.