காரில் ஜெட் வேகத்தில் வந்த கல்லூரி மாணவன்…தூக்கி வீசப்பட்ட ஆட்டோ : குளத்தில் பாய்ந்த ஓட்டுநர் பலி!

Author: Udayachandran RadhaKrishnan
9 October 2024, 4:13 pm

அதிவேகமாக கல்லூரி மாணவன் ஓட்டி வந்த கார் மோதி ஆட்டோ ஓட்டுநர் பலியான நிலையில் பயணி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கோவைப்புதூரில் இருந்து தனியார் கல்லூரி மாணவர்கள் நான்கு பேர், நேற்று முன்தினம் மாலை, கல்லூரி முடித்து விட்டு, ஒரு காரில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தனர்.

புட்டு விக்கி சாலையில் கார் வந்து கொண்டு இருந்த போது, ஒரு வாகனத்தை முந்தி செல்ல முயன்றனர். அப்போது கார் எதிரே வந்த ஆட்டோ மீது வேகமாக மோதியது.

இதில் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, சாலையோர குளக்கரை தடுப்பில் மோதி, தடுப்பு கம்பிகளை உடைத்தபடி நின்றது. அதில் ஆட்டோ டிரைவர் படுகாயங்களுடன் அந்த குளத்துக்குள் தூக்கி வீசப்பட்டார்.

ஆட்டோவில் இருந்து மற்றொருவரும் படுகாயம் அடைந்தார். கல்லூரி மாணவர்கள் வந்த காரும் எதிர் முட்புதர் பாய்ந்து நின்றது. இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் சிறிது காயம் அடைந்தனர்.

மேலும் உயிருக்கு போராடிய குனியமுத்துரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரஃபீக் மற்றும் ஆட்டோக்குள் இருந்த செல்வபுரத்தைச் சேர்ந்த சீனிவாசன் ஆகிய இரண்டு பேரையும், அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி டிரைவர் ரஃபீக் நேற்று பரிதாபமாக இறந்தார்.

சீனிவாசனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக காரை ஓட்டி வந்த மாணவர் ஜோசப் மீது, கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த விபத்து காரணமாக புட்டு விக்கி ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குளக்கரை சாலையில் வாகனங்களில் வருபவர்கள், மிதமான வேகத்தில் வருமாறும், அதிவேக வேகத்தில் வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரித்து உள்ளனர்.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!