கோவையில் வளர்ப்பு நாய் உயிரிழந்த விவகாரத்தில் திருப்பம்.. உரிமையாளர் மீது பாய்ந்த வழக்கு!
Author: Hariharasudhan30 November 2024, 11:03 am
கோவையில் மருத்துவமனையில் விட்டுச் சென்ற வளர்ப்பு நாய் உயிரிழந்தது தொடர்பாக, நாயின் உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சரத். இவர் கடந்த 11 ஆண்டுகளாக மினி பொமேரியன் வகையைச் சேர்ந்த ஆண் நாய் ஒன்றை வளர்த்து வந்தார். இந்த நிலையில், அவரது வீட்டில் நடைபெற இருந்த நிகழ்ச்சிக்காக, கடந்த நவம்பர் 20ஆம் தேதி காலை, அந்த நாயை சாய்பாபா காலனியில் உள்ள தனியார் விலங்குகள் மருத்துவமனையில் விட்டுச் சென்றார்.
பின்னர், அன்று பிற்பகலில் நாய்க்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் சரத்துக்கு தகவல் தெரிவித்தது. இதனையடுத்து, உடனடியாக சரத் மருத்துவமனைக்குச் சென்ற போது, நாய் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், இது குறித்து மருத்துவர்களிடம் கேட்ட போது, அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனை அடுத்து, சரத் தனது உறவினர்களுடன் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த சாய்பாபா காலனி போலீசாரிடம் அவர் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில், மருத்துவமனையின் மேலாளர் செல்வன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதேநேரம், மருத்துவமனை மேலாளர் செல்வன், சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். அதில், மருத்துவமனைக்கு வந்த சில மணி நேரங்களிலேயே நாய் உயிரிழந்து விட்டதாகவும், நாயின் உரிமையாளர் சரத், அவரது பெற்றோர் குணசேகரன், உமா ஆகியோர் தன்னை அவதூறாகப் பேசி தாக்கியதோடு, மருத்துவமனையையும் சேதப்படுத்தினர் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
இதையும் படிங்க: கொஞ்சம் ரிலாக்ஸ் கொடுத்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
பின்னர், இந்தப் புகாரின் அடிப்படையில், நாயின் உரிமையாளர் சரத், அவரது பெற்றோர் குணசேகரன், உமா ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் நவம்பர் 28ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. தற்போது இந்த வழக்கில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.