தண்ணீர் தொட்டியில் மலம்… நூற்றாண்டுகளாக நடந்த சாதி கொடுமை : அதிரடி காட்டிய ஆட்சியர்.. நடந்தது என்ன?

Author: Udayachandran RadhaKrishnan
28 December 2022, 12:15 pm

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முத்துக்காடு ஊராட்சியில் உள்ள இறையூர் வேங்கைவயல் பகுதியில் 50க்கும் மேற்பட்ட ஒரு தரப்பை சேர்ந்த குடும்ப மக்கள் வசித்து வருகின்றனர்.

அந்த பகுதி மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக வேங்கைவயல் பகுதியில் பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர் சிறுமிகள் ஆறு பேருக்கு கடந்த இரண்டு மூன்று நாட்களாக உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்றபோது அவர்கள் உட்கொண்ட குடிநீரில் ஏதும் பிரச்சனை இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் நேற்று வேங்கைவயல் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அந்த பகுதி மக்கள் ஏறி சென்று பார்த்தபோது அந்த குடிநீரில் மலம் கலந்திருப்பது தெரியவந்தது. இது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

இதனை அடுத்து அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ‌ சம்பவ இடத்தில் காவல்துறையினர் மற்றும் அன்னவாசல் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன், குளத்தூர் வட்டாட்சியர் சக்திவேல் உள்ளிட்ட அதிகாரிகளும் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு அந்த தொட்டியில் இருந்த தண்ணீரை வெளியேற்றியுள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதி மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்திருந்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை காமராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் வெள்ளனூர் காவல்துறையினர் வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட இறையூர் வேங்கை வயல் பகுதியில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அந்தப் பகுதி மக்களுக்காக அமைக்கப்பட்ட மருத்துவ முகாமை நேரில் பார்வையிட்டு முத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஆப்ரேட்டர் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் என அனைவரிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு யார் மீதும் சந்தேகம் உள்ளதா யாராவது புதிய நபர்கள் ஊருக்குள் வந்தார்களா குழந்தைகளுக்கு எது மாதிரியான பாதிப்பு ஏற்பட்டது என்றும் கேட்டறிந்தனர்.

மேலும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இது போன்ற இழிவான செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மாவட்ட எஸ் பி யும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

மேலும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியர் மற்றும் எஸ்பியிடம் தங்கள் பகுதியில் உள்ள அடிப்படை பிரச்சனைகளை எடுத்துக் கூறியும் மேலும் இறையூர் பகுதியில் உள்ள அய்யனார் கோயிலில் தங்களை வழிபட பல தலைமுறைகளாக ஒரு தரப்பினர் அனுமதி மறுக்கின்றனர் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

இதையடுத்து உடனடியாக ஆட்சியர் ஆதி திராவிட மக்களை அழைத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட கோயிலுக்கு சென்று வழிபாடு செய்ய நடவடிக்கை மேற்கொண்டார்.‌

அப்போது அந்தக் கோயிலின் பூசாரியான மாற்று சமூகத்தைச் சேர்ந்த ராஜன் என்பவரது மனைவி சிங்கம்மால் சாமி வந்ததைப் போல் ஆடி ஆதி திராவிட மக்களை இழிவான சொற்களைப் பயன்படுத்தி பேசியதால் அதிர்ச்சி அடைந்த ஆட்சியர் அந்தப் பெண்மணி மீது நடவடிக்கை எடுக்க கூறியதையடுத்து மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே அப்பெண்மணி மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதை தொடர்ந்து தற்போது அப்பெண்மணியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், நாங்கள் தண்ணீரிருந்தும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலத்தை கலந்து கொடூர செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து புகார் தெரிவித்தவுடன் தங்கள் பகுதியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தங்களுக்கு தேவையான உதவிகளை செய்துள்ளனர்.

மேலும் மருத்துவ முகாம் அமைத்து தண்ணீர் வசதியையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். மேலும் இதில் யார் செய்திருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் தங்கள் பகுதியில் உள்ள இறையூர் அய்யனார் கோயிலில் நாங்கள் வழிபட அனுமதி மறுக்கின்றனர் என்று ஆட்சியரிடம் தெரிவித்த நிலையில் உடனடியாக மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட கோவிலுக்கு எங்களை அழைத்துச் சென்று வழிபாடு செய்ய நடவடிக்கை மேற்கொண்டது தங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தலைமுறை தலைமுறையாக கோயிலில் வழிபாடு செய்ய முடியாமல் இருந்த தங்களுக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் வழிபாடு செய்ய ஏற்பாடு கிடைத்துள்ளதற்கு அவருக்கு நன்றி என்றும் மேலும் இதே நிலை நீடிக்க தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இதே போல் அனைத்து கோயிலிலும் இப் பிரச்சனை இல்லாமல் தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 628

    0

    0