வெறிநாய்களால் வேட்டையாடப்படும் கால்நடைகள்… இறந்த ஆடுகளை சாலையில் வைத்து விவசாயிகள் போராட்டம்!!

Author: Babu Lakshmanan
15 December 2022, 11:49 am

கரூர் காணியாளம்பட்டி பகுதியில் வெறிநாய் கடித்து இறந்த ஆடுகளுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியத்திற்குட்பட்ட காணியாளம்பட்டி பகுதிகளில் விவசாயம் நிறைந்த பகுதி. விவசாயத்துடன் ஆடு மாடுகளை மேய்த்து வருகின்றனர் விவசாயிகள், இப்பகுதிகளில் தொடர்ந்து வெறி நாய்கள் ஒன்று சேர்ந்து ஆடு,மாடு, மனிதன் என பார்க்காமல் கடித்து வருகிறது. இதனால் பல ஆடு,மாடுகள் உயிரிழந்துள்ளன.

தொடர்ந்து வெறிநாய் தொல்லை அதிகரித்து இருப்பதால், இதனை கட்டுப்படுத்த கடவூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் தாசில்தார் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் இன்றும் வெறிநாய் தொல்லையால் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ளன. பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என ஆவேசப்பட்ட விவசாயிகள், தங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்றிக் கொள்ள முடியாத நிலையில் உள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

மேலும், சிறிய சிறிய சேமித்து விவசாயம் செய்தும், அதிலிருந்து வரும் வருமானத்தில், ஆடு மாடுகளை மேய்த்து வருமானத்தை ஈட்டி வந்த நிலையில், தொடர்ந்து வெறிநாய் தொல்லையால் எங்களுடைய வாழ்வாதாரம் வீணாகி வருகிறது என கூறி வெறி நாய் கடித்து இறந்த ஆடுகளுடன் கரூர்- மணப்பாறை நெடுஞ்சாலையில் உள்ள காணியாளம்பட்டியில் பட்டியில் ஊர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஒன்று கூடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து கடவூர் தாசில்தார் மற்றும் குளித்தலை டிஎஸ்பி தலைமையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உடனடியாக வெறி நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இப்பகுதியில் உள்ள கிராம மக்கள் ஒன்று கூடி, மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் கூறி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தால் கரூர் மணப்பாறை சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  • Divyadarshini DD Advice to Priyanka Deshpande அடுத்தவங்களுக்கு வழி விடு.. விஜய் டிவி பிரியங்காவை LEFT & RIGHT வாங்கிய டிடி!