வெள்ளலூர் குப்பை கிடங்கில் குப்பை கொட்ட எதிர்ப்பு… தீர்ப்பாய உத்தரவுப்படி மாற்று இடம் தேர்வு செய்ய வலியுறுத்தல்!!
Author: Babu Lakshmanan12 March 2024, 2:20 pm
தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவுப்படி வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு பதிலாக மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்று கோவை மாநகராட்சிக்கு குறிச்சி – வெள்ளலூர் மாசு தடுப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :- கடந்த இருபது வருடங்களாக வெள்ளலூர் குப்பை கிடங்கில் கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பாக கொட்டப்படும் பலதரப்பட்ட சுமார் 1200 டன் குப்பைகளால் சுகாதார சீர்கேடு, காற்று மாசு மற்றும் நிலத்தடி நீர் மாசுபட்டு மக்கள் வசிக்க முடியாத பகுதிகளாக போத்தனூர் மற்றும் வெள்ளலூர் மாறிவிட்டது என்று எல்லோரும் அறிந்ததே, நீதிமன்ற உத்தரவின்படி வெள்ளலூரில் புதிதாக குப்பைகளை கொட்டக்கூடாது
என்றும் குப்பைகளை கொட்ட மாற்று இடம் தேர்வு செய்யவேண்டும், அதுபோல் ஏற்கனவே தேக்கி வைக்கபட்டுள்ள பல லட்சம் பழைய குப்பைகளை BIO MINING முறையில் அழித்து நிலத்தை மீட்டு அங்குள்ள மக்கள் சுகாதாரமாக வாழ வழிவகை செய்யவேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி கோவை மாநகராட்சி நிர்வாகம் செயல்படாமல் தொடர்ந்து குப்பைகளை கொட்டி வருகிறார்கள். மேலும், கடந்த பல மாதங்களாக கடும் துர்நாற்றம் பல பகதிகளில் வீசிக் கொண்டிருக்கிறது. ஆகவே, அண்மையில் மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட பயோ கியாஸ் திட்டத்தினை வெள்ளலூர் குப்பை கிடங்கல் அமைக்க கூடாது என்றும், இந்த திட்டத்தினை மாற்று இடத்தில் நிறுவ வேண்டும் என்று கோவை மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கின்றோம்.
அதுபோல், ஏற்கனவே நீதிமன்ற உத்தரவின்படி எங்கு குப்பை உற்பத்தி ஆகிறதோ, அவ்விடத்திலேயே மேலாண்மை செய்ய வேண்டும் என்று திடக்கழிவு மேலாண்மை சட்டம் 2016ன் படி மாண்புமிகு நீதியரசர்கள் உத்திரவு பிறப்பித்து இருந்தார்கள். ஆனால், அதையும் மீறி தற்போது வரை குப்பைகளை கொட்டி வருகிறார்கள்.
மேலும், தற்போது தேசிய பசுமை தீர்ப்பாயம் தென் மண்டலத்தில் கடந்த 15 மாதங்களாக நடைபெற்று வரும் வழக்கு எண் 127/2022 ல் பலமுறை மாண்புமிகு நீதியரசர்கள் கோவை மாநகராட்சி நிர்வாகம் மீது கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். மேலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கடந்த
31/03/2019 ஆண்டுக்கு பிறகு வெள்ளலூர் குப்பைக்கடங்கில் குப்பைகளை கொட்டுவதற்கு அனுமதி வழங்கவில்லை.
அதனை தொடர்ந்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை கோவை மாநகராட்சி முறையாக செயல்படுத்தவில்லை என்ற காரணத்தால் கடந்த ஏப்ரல் மாதம் 2020ஆண்டு முதல் நவம்பர் மாதம் 2020ஆண்டு வரை மாநகராடசி மீது சுமார் 80 லட்சம் அபராதம் விதித்துள்ளது. ஆனால், கோவை மாநகராட்சி நிர்வாகம் இன்றுவரை அபராத தொகையை செலுத்தவில்லை. மேலும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதியின் படி அபராத தொகை செலுத்தவில்லையென்றால் மாதம் 10 லட்சம் ரூபாய் என்ற அடிப்படையில் டிசம்பர் 2020ம் ஆண்டு முதல் இன்றைய மாதம் மார்ச் 2024ம் ஆண்டு வரை மதுப்பீடு செய்தால் ரூபாய் நான்கு கோடியே என்பது லட்சம் அபராத தொகை செலுத்தவேண்டும்.
எனவே, வெள்ளலூர் மற்றும் போத்தனூர் பகுதி வாழ் பொதுமக்களின் நலன் கருதி கோவை மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டலத்தில் இடங்களை தேர்வு செய்து குப்பைகளை கொட்டி அந்தந்த இடங்களில் இடக்கழிவு மேலாண்மை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தங்களை கேட்டுக்கொள்கிறோம், என தெரிவித்துள்ளனர்.