லஞ்சம் தவிர்… நெஞ்சம் நிமிர் ; ஒப்பந்ததாரர்களுக்கு CCCA ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் அட்வைஸ்…!!
Author: Babu Lakshmanan27 February 2024, 9:23 pm
லஞ்சம் தவிர்… நெஞ்சம் நிமிர் ; ஒப்பந்ததாரர்களுக்கு CCCA ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் அட்வைஸ்…!!
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையருக்கு லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுக்க வந்த புகாரில் தனியார் நிறுவன நிர்வாக இயக்குநர் அசோக்குமார் தலைமறைவாக உள்ளார். அவர் வெளிநாட்டுக்கு தப்பி செல்வதை தடுக்கும் விதமாக, லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.
இந்த செய்தியை சுட்டிக்காட்டிய CCCA ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தின் செயலாளரும், KCP Infra Limited நிறுவனத் தலைவருமான K.Chandraprakash, தங்கள் சங்கத்தின் ஒப்பந்ததாரர்களுக்கு மீண்டும் எச்சரிக்கையையும், அறிவுரைகளையும் வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது :- திருநெல்வேலி மாநகராட்சி ஆணையரை ஒப்பந்ததாரர் அசோக்குமார் மரியாதை நிமிர்த்தமாகத் தான் சந்திக்கச் சென்றுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க வந்ததாக நினைத்து அவர் மீது தவறாக புகார் கொடுக்கப்பட்டு விட்டது.
இது அனைவருக்கும் ஒரு பாடமாகும். ஒப்பந்தப் பணிகளை செய்யும் அனைத்து ஒப்பந்ததாரர்களும் தங்களின் பணிகளில் நேர்மையை மட்டுமே கடைபிடிக்க வேண்டும். ஊழல் மற்றும் முறைகேடு செயல்களில் நம் ஒப்பந்ததாரர்கள் யாரும் ஈடுபடக் கூடாது என்று மீண்டும் மீண்டும் சொல்கிறேன். ஆனால், யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இது போன்று அவதூறு ஏற்பட்டால் நமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சக ஒப்பந்ததாரர்களால் கூட ஆதரவு அளிக்க மாட்டார்கள். குறிப்பாக, நமது குடும்பத்தினரை வருத்தம் அடையச் செய்து விடும்.
எனவே, லஞ்சம் கொடுத்து வேலையை செய்ய வேண்டும் என்று நினைக்கக் கூடாது. அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் உள்ளது, அனைவரின் செல்போன்களிலும் ஆடியோ ரெக்கார்ட் செய்யப்படும் வசதிகள் உள்ளன. ஆகவே, தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபட நினைத்தால் பின்விளைவுகள் மோசமாகத் தான் இருக்கும், எனக் கூறியுள்ளார்.