மேல்மருவத்தூருக்குச் சென்ற பேருந்து விபத்து; 40 பேர் படுகாயம்.. அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்!
Author: Hariharasudhan27 December 2024, 3:21 pm
ஊத்தங்கரை பகுதியில் தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 40 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.
கிருஷ்ணகிரி: தமிழகத்தில், பெண்கள், குழந்தைகள் என பலரும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு மாலை அணிவித்து, விரதம் இருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில், தர்மபுரி மாவட்டம், எட்டியம்பட்டி பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் என 50க்கும் மேற்பட்டோர், தனியார் பேருந்தில் மேல்மருவத்தூருக்கு இன்று (டிச.27) காலை புறப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், இப்பேருந்து ஊத்தங்கரை அருகே வந்து கொண்டிருந்து உள்ளது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இவ்வாறு சாலையின் பக்கவாட்டு பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததால், அதில் பயணித்த 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மேலும், ஆறு பெண்கள் பலத்த காயத்துடன் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, 40 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இதுக்கு முன்னால 5 பேரு.. ஆனா 3 புருஷன் தான்.. கரூர் கல்யாண ராணி சிக்கியது எப்படி?
இதன்படி, வாகனத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டதா அல்லது ஓட்டுனரின் தவறா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். இவ்வாறு கோயிலுக்கு மாலை அணிந்து சென்ற பக்தர்களுக்கு விபத்து நேர்ந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், தற்போது பேருந்து கவிழ்ந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.