கடையின் மேல்தளத்தை துளையிட்டு கொள்ளை… செல்போன்கள், ரொக்கத்தை திருடிய 17 வயது சிறுவன் உள்பட 2 பேர் கைது..
Author: Babu Lakshmanan13 May 2022, 10:53 am
சென்னை : கடையின் மேல் தளத்தை துளையிட்டு செல் போன்கள் , பணம் , கணினி உதிரி பாகங்களை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை வியாசர்பாடி மார்க்கெட் எருக்கஞ்சேரி ஹை ரோடு பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (44). இவர் தனது வீட்டின் கீழ்ப்பகுதியில் மொபைல் போன் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த 4ஆம் தேதி இரவு இவரது கடையை பூட்டி விட்டு மேலே வீட்டிற்கு உறங்கச் சென்றார்.
மறுநாள் காலை வந்து பார்த்த போது கடையின் மேலே உள்ள தகரத்தில் துளையிட்டு கடைக்குள் நுழைந்து கடையில் இருந்த செல்போன்கள், ப்ளூடூத், கீபோர்டு, பணம் 60 ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட பொருட் கள் திருடி சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
ஏற்கனவே இவரது கடையில் 2021ம் வருடம் நவம்பர் மாதம் இதே போன்று கடையின் மேற்கூரையை பிரித்து 5 செல்போன்கள் திருடு போனது. இரண்டு சம்பவங்களும் ஒரே மாதிரி இருந்ததால் போலீசார் சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இதில் வியாசர்பாடி சி.கல்யாணபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தனது நண்பரான வியாசர் பாடி ஏ.கல்யாணபுரம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (23) என்ற நண்பருடன் சேர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
சிறுவன் திருடப்படும் செல்போன்களை மூர்த்தி விற்று இருவரும் வரும் லாபத்தில் சரிசமமாகப் பிரித்து எடுத்துக் கொண்டது விசாரணையில் தெரிய வந்தது. இவர்களிடமிருந்து 25 செல்போன்கள் மற்றும் கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சிறுவன் சீர்திருத்த பள்ளியிலும், மூர்த்தியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத் தனர்.