சேரில் அமர்ந்தபடியே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை… அதிகாலையில் நடந்த ஷாக் சம்பவம் ; சென்னை துறைமுகத்தில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
13 December 2023, 12:40 pm

சென்னை காமராஜர் துறைமுகத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் குறித்து மீஞ்சூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த அழகுமலை என்பவரின் மகன் குமார் (38). இவர் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக பணிபுரிந்து வந்தார். கடந்த 6 மாதங்களாக சென்னை காமராஜர் துறைமுகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். பாதுகாப்பு படை வீரர் குமாருக்கு மனைவி மகாலட்சுமி மகன் ரக்ஸின் (6), மகள் நிசீதா (4) என இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், காமராஜர் துறைமுக ஸ்டேஷன் சிக்னல் பாயிண்ட் அருகே பணியில் இருந்த அவரை தணிக்கை செய்ய உதவியாளர் ராஜு என்பவர் அதிகாலையில் வந்துள்ளார். அப்போது, சேரில் அமர்ந்து இருந்தபடி தான் வைத்திருந்த இன்சாஸ் துப்பாக்கியை கையில் பிடித்தபடி, தலையில் ரத்த காயத்துடன் குமார் இறந்து கிடந்துள்ளார்.

இதனைப் பார்த்து பதறிப்போன ராஜு, உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததின் பேரில், அங்கு வந்த போலீசார், அவரது உடலை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, குடும்ப பிரச்சினை காரணமாக துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்டாரா..? அல்லது பணி சுமை காரணமா…? வேறு ஏதேனும் காரணமா..? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குமார் தான் வைத்திருந்த இன்சாஸ் துப்பாக்கி மூலம் ஒரு முறை கழுத்தில் சுட்டதில் தலை வழியாக குண்டு பாய்ந்து அவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 508

    0

    0