மத்திய அரசு நிதி ஒதுக்கியும்… மாநில அரசுகள் அதனை முறையாக பயன்படுத்துவதில்லை : மத்திய இணையமைச்சர் குற்றச்சாட்டு…!!
Author: Babu Lakshmanan14 July 2022, 5:18 pm
கோவை : மத்திய அரசு திட்டங்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டும், அதனை மாநில அரசுகள் முறையாக பயன்படுத்துவதில்லை என்று மத்திய இணையமைச்சர் பகவத் கிஷன் ராவ் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள பல்வேறு மக்கள் நலத்திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கோவை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கிஷன் ராவ் கோவை வந்துள்ளார். மாவட்ட அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்தவர்கள் மற்றும் தொழில் துறையினரை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இரண்டு நாட்கள் பயணமாக மத்திய இணையமைச்சர் கோவை வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மத்திய இணையமைச்சர் தலைமையில் இன்று பிற்பகல் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய அரசின் எட்டு ஆண்டுகால சாதனைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், கோவை மாவட்டத்தில் மத்திய அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படும் முறை குறித்து கட்சி நிர்வாகிகளிடம் கேட்டறியப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் பகவத் கிஷன் ராவ் தெரிவித்ததாவது :- ‘நரேந்திர மோடி அவர்கள் பிரதமராக பதவியேற்று எட்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இந்த எட்டு ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக சமூகத்தின் பல்வேறு பிரிவினரும் பயன்பெறும் வகையில் ஏராளமான வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
எரிவாயு இணைப்பு இல்லாத ஏழை மக்களுக்காக கொண்டுவரப்பட்ட மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் மூலம் நாட்டில் 9 கோடி குடும்பங்கள் பயன் அடைந்துள்ளனர். விவசாயிகளுக்கான பிரதம மந்திரியின் நிதி உதவி திட்டத்தில் சுமார் 11 கோடியே 50 லட்சம் விவசாயிகள் ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி பெற்று பயனடைந்து வருகின்றனர்.
பிரதம மந்திரியின் கரிப் கல்யாண் திட்டத்தின் மூலம் கடந்த 15 மாதங்களாக நாட்டில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் கோதுமை, அரிசி மற்றும் பருப்பு ஆகியவற்றை இலவசமாக பெற்று வருகின்றனர். புதிய தொழில் தொடங்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் எட்டு வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட முத்ரா கடன் திட்டத்தின் மூலம் பிணையில்லா கடன் வழங்கப்பட்டு பலர் தொழில் தொடங்கி முன்னேறி வருகின்றனர்.
குறிப்பாக தெருவோரங்களில் கடை வைத்திருப்பவர்களும் வியாபாரிகளும் பிணை கொடுக்க முடியாத சூழலில் உள்ளவர்கள். இவர்களுக்கான பிரதம மந்திரி சுய நிதி திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கானோர் பயனடைந்துள்ளனர்.
நாட்டின் 75வது சுதந்திர பொன்விழா ஆண்டை கொண்டாடும் வேளையில் இன்றும் தண்ணீர் இணைப்பு இல்லாத நகர மற்றும் ஊரக பகுதிகள் உள்ளன. இதற்காக, பாரத பிரதமரின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து பகுதிகளில் உள்ள வீடுகளிலும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு அனைவருக்கும் குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இது போன்ற மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் எவ்வாறு மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறித்து பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் கோவை மாநகரில் உள்ள சாலை பிரச்சனை, திடக்கழிவு மேலாண்மை, பாதாள சாக்கடை திட்ட பணிகளில் உள்ள கோளாறுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் சொத்து வரி உயர்த்தப்பட்டது குறித்தும் கூறப்பட்டது.
விமான நிலைய விரிவாக்கம் என்பது இந்த நகருக்கு மிகவும் தேவையானது. இதில் ஒரு சில விஷயங்கள் மத்திய அரசையும் மாநில அரசையும் சார்ந்துள்ளது. இருவரும் இனைந்து செயல்பட வேண்டும்.
மத்திய அரசு நேரடியாக மக்களை சந்தித்து வழங்க வேண்டிய நலத்திட்டங்களையும் வழங்கி வருகிறது. ஒரு சிலவற்றை மாநில அரசின் மூலமாகவும் வழங்கி வருகிறது. அனைத்து நலத்திட்டங்களும் மக்களை சென்றடைய வேண்டும் என்பது மத்திய அரசின் எண்ணம். பெட்ரோல், டீசல் விலையில் ஏற்கனவே மத்திய அரசால் இருமுறை வரிகள் குறைக்கபட்டுள்ளது. மத்திய அரசு வாட் வரியை குறைத்தது ஆனால் மாநில அரசுகள் குறைக்க வில்லை.
மத்திய அரசின் பல்வேறு மக்கள் நலதிட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யபட்டும் மாநில அரசு திட்டங்களை சரிவர செய்வது இல்லை என குற்றச்சாட்டு உள்ளது. எனவே இது குறித்து ஆய்வு செய்வதற்காக மாவட்ட அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திட்டத்தின் பயனாளிகளை நேரடியாக சந்தித்து கருத்துக்கள் பெறப்பட உள்ளது. இதனடிப்படையில் உரிய நடவடிக்கை திட்டமிடப்படும்’ என தெரிவித்தார்.