இது பண்டிகை காலம்… பொதுமக்களுக்குத் தான் சிரமம்… தொழிற்சங்கங்களின் பிரச்சனையை தீர்த்து விடுங்க ; அமைச்சர் முருகன் வலியுறுத்தல்
Author: Babu Lakshmanan9 January 2024, 5:18 pm
அடுத்த 25 ஆண்டுகளில் நமது நாடு வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும் என்றால் ஏழை எளிய மக்கள் வளர வேண்டும் என பாரத பிரதமர் கடுமையாக உழைத்து வருகிறார் என்று மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்த தண்டுகாரன்பாளையம் பகுதியில் நடைபெற்ற நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதத்தின் நிகழ்ச்சியில் இன்று மத்திய தகவல், ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் எல். முருகன் கலந்து கொண்டார்.
அப்போது, மத்திய அரசின் நலத்திட்டங்கள் கீழ் சுகாதாரத்துறை, வேளாண்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டார். பின்னர், பொதுமக்களுடன் ‘நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்’ என்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, மத்திய அரசின் நலத்திட்டங்கள் ஏழை எளிய மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரத யாத்திரை செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனையை விளக்கும் விதமாக இந்த யாத்திரை செயல்பட்டு வருகிறது.
அனைத்து மக்களுக்கும் இலவச குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. முத்ரா வங்கியின் மூலமாக சிறு, குறு தொழிலாளர்களுக்கு தங்களது தொழிலை வளர்த்துக் கொள்ள கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஏழை விவசாயிகள் பயன்பெறும் வகையில் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. வரும் 2047 ஆம் ஆண்டு நமது பாரதம் வளர்ச்சி அடைந்த பாரதமாக மாற்றுவதற்கு பிரதமர் கடுமையாக உழைத்து வருகிறார். அந்த இலக்கை நோக்கி நாம் அனைவரும் சென்று கொண்டிருக்கிறோம்.
இந்த உத்தரவாத வாகனம் ஆனது அனைத்து கிராம பகுதிகளிலும் ,டவுன் பகுதிகளிலும் சென்று மத்திய அரசின் நலத்திட்டங்கள் மூலம் மக்கள் பயன்பெற உதவியாக இருந்து வருகிறது . தமிழ்நாட்டிற்கு மட்டும் கடந்த 9 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி ரூபாய் காண நலத்திட்டங்களை நமது பாரத பிரதமர் வழங்கி உள்ளார். அடுத்த 25 ஆண்டுகளில் நமது நாடு வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும் என்றால் ஏழை எளிய மக்கள் வளர வேண்டும், அவர்களுக்கு அனைத்து திட்டங்களும் சென்று சேர வேண்டும் என பாரத பிரதமர் உழைத்து வருகிறார், என கூறினார்.
மேலும், பயனாளிகளுக்கு மத்திய அரசின் உஜ்வாலா, ஆயுஷ்மான் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் 6.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பண்டிகை காலம் என்பதால் பொதுமக்களின் சிரமம் ஏற்படாத வகையில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினரிடம் மாநில அரசு கோரிக்கைகள் குறித்து விரைந்து பேசி தீர்வு காண வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் துறை சார்ந்த அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் என அனைவரும் பங்கேற்றனர்.