மாபெரும் கொள்ளையை அடித்த முதலமைச்சர் குடும்பம்… திருட்டு திமுகவை மக்கள் தூக்கி எறிவார்கள் ; எல்.முருகன் கடும் தாக்கு
Author: Babu Lakshmanan24 February 2024, 9:18 am
திமுக கட்சி மன்னர் ஆட்சி மற்றும் ஊழல் ராஜாக்கள் நிறைந்த கட்சி என பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன் விமர்சித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் நேற்று மாலை மத்திய இணை அமைச்சர் எல் முருகன் வருகை தந்தார். ரோப் கார் வழியாக மலைக் கோவிலுக்கு சென்று ராஜ அலங்காரத்தில் இருந்து தண்டாயுதபாணி வழிபட்டார். பின்னர் போகர் சன்னதிக்கு சென்று வழிபட்டு பின்னர் கோவில் வளாகத்தில் தியானம் செய்தார். தொடர்ந்து, பொதுமக்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மீண்டும் ரோப் கார் வழியாக கீழே வந்த அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்ததாவது:- வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாக 400 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆவார், எனக் கூறினார்.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் எல்.முருகன் போட்டியிட்டால் தோல்வி அடைவார் என்று ஆ.ராசா விமர்சனம் கூறியதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய இணை அமைச்சர் எல் முருகன், பாஜகவில் பாராளுமன்ற குழு முடிவு செய்து பின்னரே தேர்ந்தெடுக்கப்படுவார்கள், அதன் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளேன்,
திமுகவில் உள்ள பொறுப்பாளர்கள் அவர்களே நாங்கள் தான் இந்த தொகுதி வேட்பாளர், எம்.பி என்று முடிவு செய்து கொள்வார்கள். ஆனால் பாஜகவில் பாராளுமன்ற குழு பரிந்துரைக்கும் நபர்கள் வேட்பாளர்கள். திமுக எம்பி ஆ.ராசா ஊழல்வாதி என்று மக்களுக்கு தெரியும் நீலகிரியில் ஆ.ராசாவை புறக்கணிக்க மக்கள் தயாராகி விட்டார்கள். ஒட்டுமொத்த திமுகவையும் தமிழகத்தில் மக்கள் புறக்கணிக்க தயாராகி விட்டார்கள்.
தேர்தலில் கூறிய எந்த ஒரு வாக்குறுதி நிறைவேற்றவில்லை. டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்றார்கள், மூடவில்லை. கிராம தோறும் கஞ்சா விற்பனை, மது விற்பனையாகி வருகிறது. கல்விக்கடனை பற்றி வாக்குறுதி கொடுத்துவிட்டு திமுக வாயை திறக்கவில்லை. சொத்துவரி உயர்வு, நில வரி உயர்வு, மின்சார கட்டணம் 300 ரூபாய் இருந்த மின்சார கட்டணம் தற்போது ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. ஊழல் திமுகவை திருட்டு திமுகவை வரும் தேர்தலில் மக்கள் தூக்கி எறிவார்கள், என்றார்.
பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனை நிதி அமைச்சரிலிருந்து மாற்றப்பட்டதற்கு தகவல் தொழில்நுட்ப பிரிவை மேம்படுத்துவதற்காகவே என்று முதலமைச்சர் கூறியிருப்பதற்கு, முதலமைச்சர் குடும்பம் மிகப்பெரிய கொள்ளை அடித்திருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்து ஒரே வருடத்தில் 30 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்து இருப்பதாக சமூக வலைதளவில் வெளியான தகவலை அடுத்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மாற்றப்பட்டது எல்லோருக்கும் தெரியும், என தெரிவித்துள்ளார்.