தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் எழுச்சி… முக்கியமான கட்சியாக உருவெடுத்த பாஜக ; மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேச்சு!!

Author: Babu Lakshmanan
19 April 2023, 6:21 pm

தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய அளவில் எழுச்சி பெற்று வீறு நடை போட்டு வருவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் அமைந்துள்ள பாஜக அலுவலகத்தில் கட்சி கொடியை மத்திய தகவல் – ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் இன்று ஏற்றி வைத்தார்.

இவ்விழாவில் மாநில பாஜக துணைத்தலைவர் ராமலிங்கம், வி.பி.துரைசாமி, மாவட்ட தலைவர் சத்திய மூர்த்தி உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு பேசினார் அப்போது அவர் பேசியதாவது :- தமிழகத்தில் முக்கியமான கட்சியாக பாஜகவை வளர்த்துள்ளோம். தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் பாஜக எழுச்சி பெற்று வீறு நடைபோட்டு கொண்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு பல திட்டங்களை வழங்கியுள்ளனர். அனைத்து கிராமங்களிலும் பிரதமரின் திட்டங்களால் மக்கள் பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக முத்ரா திட்டத்தில் பெண்கள் அதிகம் பயன்பெற்ற மாநிலம் தமிழ்நாடு என்ற இலக்கை நாம் அடைந்துள்ளோம். இந்த திட்டத்தின் மூலம் தேசிய அளவில் தமிழகம் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளோம்.

உலக அளவில் இறால் ஏற்றுமதியில் இந்தியாவிற்கு முதலிடம் கிடைத்துள்ளது. பிரதமரின் சுயசார்பு இந்திய திட்டத்தின் கீழ் சென்னை, ஆந்திரா, மகாபலிபுரம், மரக்காணம் பகுதியிலிருந்து அதிக அளவில் இறால் ஏற்றுமதி நடைபெற்று வருகிறது.

பிரதம மந்திரின் அனைவருக்கும் வீடு திட்டம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் ஏராளமான மக்கள் பயன் பெற்றுள்ளனர். ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்குவதில் பிரதமர் நரேந்திர மோடி முனைப்போடு உள்ளார், என அவர் பேசினார்.

  • Chennai 28 part 3 விரக்தியில் வெங்கட் பிரபு எடுத்த முடிவு…சாதகமாக அமையுமா..!