தீபாவளியை முன்னிட்டு ஆன்மீக ரயில் பயணம் அறிமுகம் ; காசி முதல் ராமேஸ்வரம் வரை… 9 நாட்களுக்கு கட்டணம் எவ்வளவு தெரியுமா..?
Author: Babu Lakshmanan12 October 2023, 9:27 pm
தீபாவளிக்கு கங்கா ஸ்நான யாத்திரை என்ற ஆன்மீக ரயில் பயணத்தை மத்திய ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.
திண்டுக்கல் பத்திரிகை மன்றத்தில் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழக தென் மண்டல குழு பொது மேலாளர் ராஜலிங்கம் பாசு செய்தியாளர்களை சந்தித்தார்: அப்போது அவர் தெரிவித்தாவது :- இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் சார்பில் பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் தென் மண்டலம் சார்பில், தென்காசியில் இருந்து ‘தீபாவளி கங்கா ஸ்னான சிறப்பு யாத்திரை’ என்ற பெயரில் சுற்றுப்பயணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் பயணிகள், தீபாவளி அன்று காசியில் கங்கா ஸ்னானம் செய்து பின்னர் ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமியை தரிசிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த சுற்றுலா ரயில் தென்காசியில் இருந்து தொடங்கி ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் ,திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம் மற்றும் சென்னை வழியாக காசி, திரிவேணி சங்கமம் (அலகாபாத்), கயா மற்றும் ராமேஸ்வரம் ஆகிய புன்னிய ஸ்தலங்களுக்கு சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் மாதம் 09 ஆம் தேதி தொடங்கி 08 இரவுகள் மற்றும் 09 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதற்கான கட்டணம் ஆக ஒரு நபருக்கு குளிர்சாதன வசதி கொண்ட வகுப்புக்கு ரூ.30,500ம், சாதாரண வகுப்பில் ரூ. 16, 850 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா இரயிலில் தங்குமிடம், உள்ளூர் பார்வையிடுவதற்கான போக்குவரத்து, சைவ உணவு, சுற்றுலா மேலாளர் மற்றும் தனியார் பாதுகாவலர் வசதி, பயணக் காப்புறுதி போன்ற வசதிகள் உள்ளன.
மத்திய, மாநில மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் இந்த சுற்றுலா ரயிலில் பயணித்தால், LTC சான்றிதழ்களை பெறலாம், என்றும் தெரிவித்தார்.