தொடரும் கனமழை எச்சரிக்கை..! தமிழகத்தில் 14-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு..!

Author: Vignesh
7 November 2022, 10:19 am

தமிழ்நாட்டில் 14-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக குமரி கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதன் தொடர்ச்சியாக நாளை மறுநாள் (புதன்கிழமை) இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

இது அதற்கடுத்த 2 நாட்களில் வடமேற்கு திசையில் தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது அடுத்தகட்டமாக தாழ்வு மண்டலமாகவோ அல்லது புயல் சின்னமாகவோ வலுவடைவது பற்றி நாளை மறுநாள்தான் கணிக்க முடியும் என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இந்த வானிலை நிகழ்வை ஆய்வு மையம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. நாளை மறுநாள் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில் 9-ந் தேதியில் இருந்து அனேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

வருகிற 10-ந் தேதியை பொறுத்தவரையில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் 14-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், வரும் 9-ம் தேதி உருவாக உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழ்நாட்டில் 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • red card issued to serial actress raveena daha இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…