சந்திர மண்டலத்தில் சந்திரயான் 3… இந்தியாவின் சாதனையை MEDIA TREEல் கண்டுகளித்த கோவை மக்கள்!
Author: Udayachandran RadhaKrishnan23 August 2023, 7:50 pm
சந்திராயன் விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் நிலவின் தென்பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது. Soft Landing முறையில் தரையிறக்கப்பட்ட அந்த நிகழ்வை இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் பார்த்து மகிழ்ந்தனர்.
இந்நிகழ்வு குறித்து பல்வேறு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. அதுமட்டுமின்றி விக்ரம் லேண்டர் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் வெற்றிகரமாக நிலவின் தென்பகுதியில் தரையிறங்க வேண்டுமென பல்வேறு மக்கள் பிரார்த்தனைகள் மேற்கொண்டனர்.
அந்நிகழ்வின் தகவல்கள் புகைப்படங்கள், வீடியோக்களை இஸ்ரோ பகிர்ந்தது. அவை பல்வேறு இடங்களில் ஒளிப்பரப்பும் செய்யப்பட்டது.
அதன்படி கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஒளித்திரை டவரில் (MEDIA TREE) அந்நிகழ்வு ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. இதனை பள்ளி கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் பார்த்து கைத்தட்டி வெற்றியை கொண்டாடினர்.
அதில் ஒரு முதியவர் கையில் தேசிய கொடி ஏந்தியபடி வந்து வந்தே மாதரம் முழக்கங்களுடன் மகிழ்ச்சியை வெளிபடுத்தினார். மேலும் டவுன்ஹால் பகுதியை சேர்ந்த நந்தன கிருஷ்ணன் என்ற எட்டாம் வகுப்பு பயிலும் சிறுவன் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.