மீண்டும் டிடிஎப் வாசனுக்கு செக்… காரை ஒப்படைக்க முடியாது : நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Author: Udayachandran RadhaKrishnan12 July 2024, 11:43 am
கடந்த மே மாதம் 15 ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி காரில் யூடியூபர் டி.டி.எப் வாசன் சென்ற போது மதுரை வண்டியூர் டோல்கேட் பகுதியில் சென்ற போது அஜாக்கிரதையாகவும், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாகவும் செல்போனில் பேசிக்கொண்டே காரை ஓட்டியதாக பிணையில் வெளிவர முடியாத வகையில் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரது கார் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனையடுத்து டிடிஎப் வாசன் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு செய்த நிலையில் அவருக்கு நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில் டிடிஎப் வாசனின் தாயார் சுஜாதா காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை தங்களிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என மனு செய்திருந்தார்.
இந்த மனு மதுரை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சுப்புலெட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, மனுதாரர் டிடிஎப் வாசனின் தாய் என்பது தெரியவருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் ஏற்கனவே இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட நபர் வாகனத்தை பயன்படுத்தினால் அதேபோன்ற குற்றத்தை செய்ய வாய்ப்பு இருக்கலாம் என நீதிமன்றம் கருதுவதால் காரை ஒப்படைக்க உத்தரவிட முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.