நிரம்பிய சென்னையின் முக்கிய ஏரிகள்.. கரையோர மக்களே உஷார்!
Author: Hariharasudhan13 December 2024, 11:58 am
பூண்டி நீர்த்தேக்கம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகள் நிரம்பியதால், உபரி நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
சென்னை: சென்னை, திருவள்ளூர் மற்றும் ஆந்திர கரையோரப் பகுதிகளில் பெய்த தொடர் கனமழை மற்றும் நீர்வரத்து அதிகரிப்பால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் மிக வேகமாக உயர்ந்து வந்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் முழுக் கொள்ளளவான 24 அடியில் 23.29 அடியை மிக விரைவில் எட்டியது.
இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியில் இருந்து உபரி நீர் திறக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், ஏரியின் மொத்தக் கொள்ளளவான 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடியில், தற்போது 3 ஆயிரத்து 453 மில்லியன் நீர் இருப்பு உள்ளது. அதேபோல், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கன அடி நீர்வரத்து உள்ளது.
இதனால், நீர்வளத் துறை அதிகாரிகள் பரிந்துரையின் படி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீரைத் திறக்க உத்தரவிட்டார். அதன்படி, முதல் கட்டமாக இன்று (டிச.13) காலை 8 மணியளவில் 5 கண் மதகுகள் வழியாக, ஆயிரம் கன அடி நீரை வெளியேற்ற உள்ளனர்.
இவ்வாறு நிரம்பி ஓடும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு காரணமாக குன்றத்தூர், காவனூர், சிறுகளத்தூர், வழுதளம்பேடு, திருமுடிவாக்கம் மற்றும் திருநீர்மலை ஆகிய 6 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மிதக்கும் செங்கோட்டை.. நெல்லை, தென்காசியில் சூழ்ந்த மழைநீர்.. மக்கள் கடும் அவதி!
பூண்டி நீர்த்தேக்கத்தின் நிலை: அதேநேரம், திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்து உள்ள பூண்டி நீர்த்தேக்கத்தின் முழுக் கொள்ளளவு 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடி ஆகும். இந்த நிலையில், இன்று (டிச.13) காலை 4 மணி நிலவரப்படி, அதன் நீர் இருப்பு 34.68 அடியாகவும், கொள்ளளவு 3 ஆயிரத்து 41மில்லியன் கன அடியாகவும் மற்றும் நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியில் இருந்து 15 ஆயிரத்து 500 கன அடியாகவும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், பூண்டி அணையின் பாதுகாப்பு கருதி, சத்தியமூர்த்தி நீர்த் தேக்கத்திலிருந்து நேற்று மாலை வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று காலை 10 மணியளவில் வினாடிக்கு 16 ஆயிரத்து 500 கன அடியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக, கொசஸ்தலையாறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம். ஆட்ரம்பாக்கம். ஒதப்பை. நெய்வேலி, எறையூர். பீமன்தோப்பு. கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு மற்றும் மெய்யூர் உள்ளிட்ட கிராமங்கள் மற்றும் கொசஸ்தலையாற்றின் இரு பக்கமும் உள்ள தாழ்வானப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.