கைதின் போது பெண் எஸ்ஐ-க்கு திடீர் நெஞ்சுவலி… மருத்துவமனையில் அனுமதி ; செங்கல்பட்டில் பரபரப்பு…!!

Author: Babu Lakshmanan
31 July 2023, 1:46 pm

அரசு மருத்துவரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யும் போது நெஞ்சுவலி ஏற்பட்டதாக ஆய்வாளர் மகிதா செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் மகிதா அன்ன கிறிஸ்டி. இவரிடம் காட்டாங்குளத்தூரை சேர்ந்த ஒரு பெண் தனது 17 வயது மகளை திரிசூலம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் (27) என்பவர் ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கியதாக கடந்த ஜூலை 2-ம் தேதி புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் போக்சோ வழக்குப் பதிவு செய்து ரஞ்சித்தை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். அப்போது, சிறுமியின் தாயாரிடம் விசாரித்த போது, சிறுமிக்கு ஏற்கனவே இரண்டு‌ முறை கருக்கலைப்பு செய்ததை கூறியுள்ளார். அதில், மறைமலை நகர் மற்றும் சிங்கபெருமாள் கோவிலில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதாகவும், அங்கு தான் சிறுமி கருவுற்ற போது மாத்திரைகள் வாங்கி கருக்கலைப்பு செய்ததாக கூறி உள்ளார்.

இதனைத் தொடர்ந்து கூடுவாஞ்சேரி காவல் நிலைய ஆய்வாளர் மகிதா, மறைமலை நகரில் உள்ள வானவில் மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவர் உமா மகேஸ்வரியிடம் விசாரணை நடத்தி உள்ளார். மேலும், சிறுமியின் தாய் அளித்த வாக்குமூலத்தில் சிங்கபெருமாள் கோவிலில் உள்ள சக்தி மருத்துவமனையிலும் மாத்திரைகள் வாங்கி கருக்கலைப்பு செய்ததாக கூறி உள்ளார்.

தொடர்ந்து , சக்தி மருத்துவமனைக்குச் சென்ற ஆய்வாளர் மகிதா அரசு மருத்துவர் பராசக்தியிடம் விசாரணை மேற்கொண்டு உள்ளார். அப்போது, சட்ட விரோதமாக 17 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ததற்கு வழக்குப்பதிவு செய்ய உள்ளதாக மகிதா கூறியதாக சொல்லப்படுகிறது. நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக பேரம் பேசி பத்து லட்சம் ரூபாயை பெற்றுள்ளார். தொடர்ந்து, மறைமலைநகரில் உள்ள மருத்துவர் உமா மகேஸ்வரியிடம் இருந்து 2 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

இந்த விவகாரம் வெளியில் கசிந்து தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு புகாராக சென்றுள்ளது. உடனடியாக தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ், ஆய்வாளர் மகிதாவை அழைத்து விசாரணை செய்துள்ளார். அப்போது, மகிதா பணம் பெற்றது உறுதியானதால் அவரை சஸ்பெண்ட் செய்தும், வாங்கிய பணத்தை திருப்பி அளிக்கவும் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டிருந்தார்.

மேலும், இது தொடர்பாக அரசு மருத்துவர் பராசக்தி மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தன்னை காவல் ஆய்வாளர் மகிதா மிரட்டி பணம் பறித்ததாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். இது தொடர்பாக ஆய்வாளர் மகிதா மீது பணம் பறித்தல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஆய்வாளர் மகிதாவை பொன்னேரி அருகே போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து, அவரை மறைமலைநகர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து, ஆய்வாளர் மகிதாவை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கு முன்பு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக காவல்துறையினர் அழைத்து வந்த நிலையில், திடீரென ஆய்வாளர் மகிதா மயக்கம் போட்டு கீழே விழுந்தார்.

மேலும், நெஞ்சுவலி ஏற்பட்டதாக மருத்துவர்களிடம் கூறி உள்ளார். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 385

    0

    0