பழுதாகி நின்ற லாரி… படார் என கேட்ட சத்தம் ; சுக்குநூறாக நொறுங்கிய ஆம்னிப் பேருந்து… 4 பயணிகள் பரிதாப பலி!!
Author: Babu Lakshmanan16 May 2024, 12:23 pm
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு அருகே மதுராந்தகத்தில் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி ஒன்று இன்று அதிகாலை பழுதாகி நின்றது. அப்போது, திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் ஆம்னி பஸ் கண்ணிமைக்கும் நேரத்தில் பழுதாகி நின்றிருந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது.
இதில், ஆம்னி பஸ்சின் முன்பக்கம் நொறுங்கியது. இதில், ஆம்னி பஸ்சில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதற்கிடையே, விபத்தில் சிக்கிய ஆம்னி பஸ்சின் பின் பக்கம், முசிறியில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த அரசு விரைவு பஸ் ஒன்று மோதியது. இந்த விபத்துக்களில் 20 க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர்.
மேலும் படிக்க: எச்சரித்தும் கேட்காததால் நடந்த சம்பவம்.. பயணிகளின் உயிரோடு விளையாடிய அரசுப் பேருந்து ஓட்டுநர்.. அதிர்ச்சி வீடியோ!
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் காயம் அடைந்த பயணிகளை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக்கொண்ட சம்பவம் பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.