‘சொல்றதை செய்யலனா… உன்னை கொன்னுடுவேன்’… செயல் அலுவலரை மிரட்டிய பாமக பேரூராட்சி துணை தலைவர்..!!
Author: Babu Lakshmanan16 September 2023, 12:15 pm
நான் சொல்கிற வேலையை செய்யவில்லை என்றால், உன்னை கொலை செய்து விடுவேன் என்று செயல் அலுவலரை மிரட்டும் பாமக பேரூராட்சி துணை தலைவரின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் இடைக்கழிநாடு பேரூராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இதில் பேரூராட்சி மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த சம்யுக்தா ஐயப்பன் என்பவரும், துணை தலைவராக பாமகவை சேர்ந்த கணபதியும் உள்ளனர்.
நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலின் போது அமமுகவில் இருந்த சம்யுக்தா, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி கவுன்சிலர்களின் ஆதரவோடு வெற்றி பெற்று பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் சமீபத்தில் திமுகவிற்கு சம்யுக்தா மாறி உள்ளார். இதனால் திமுகவினரிடையே கோஷ்டி பூசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பேரூராட்சி தலைவர் சம்யுக்தாவிற்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்க, அவர்களுடன் அதிமுகவும் கைகோர்த்து அவர் மீது கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது. இதனிடையே, துணை தலைவர் கணபதி மட்டும் சம்யுக்தாவிற்கு ஆதரவாக செயல்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் பேரூராட்சியில் மேற்கொள்ளும் பணிகள் மற்றும் திட்டங்களுக்கு செயல் அலுவலராக பணியாற்றி வரும் ராஜகோபால் என்பவர் பில் அளிக்காமல் தட்டி கழித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
கடந்த 12ஆம் தேதி செயல் அலுவலர் ராஜகோபால் வழக்கம் போல பணியில் இருந்துள்ளார். அங்கு வந்த துணை தலைவர் கணபதி, பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சரிவர குடிநீர் வராததால் பொதுமக்கள் தங்களை கேள்வி கேட்பதாகவும், ஏற்கனவே செய்த பணிகளுக்கு ஏன் பில் இன்னும் பாஸ் செய்யவில்லை எனவும் கேட்டுள்ளார்.
அதற்கு பதில் அளித்த செயல் அலுவலர் பில் அனைத்தும் AD-யிடம் உள்ளது. அவர் கையொப்பமிட்டால் பணம் வந்துவிடும் என தெரிவித்து உள்ளார். தொடர்ந்து, தனக்கு வேலை இருப்பதாக சொல்லி செயல் அலுவலர் அங்கிருந்து கிளம்பி செல்ல முற்பட்டார். இதனால், ஆத்திரம் அடைந்த துணை தலைவர் கணபதி, செயல் அலுவலர் ராஜகோபாலை ஆபாசமாக திட்டி தீர்த்துள்ளார்.
மேலும், நான் சொல்கிற வேலையை செய்யவில்லை என்றால் உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டி உள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் பேரூராட்சி அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் ஆடியோவுடன் பதிவாகி உள்ளது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.