டிச., 2, 3ம் தேதிகளில் சென்னை மக்களே உஷார்.. 5 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை ; வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை!!

Author: Babu Lakshmanan
29 நவம்பர் 2023, 2:35 மணி
Rain - Updatenews360
Quick Share

சென்னை ; டிசம்பர் 2 & 3 தேதிகளில் 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை – நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மையத்தில் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:- தற்பொழுது இலங்கை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்க கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அதேப் பகுதியில் நிலை பெற்று வருகிறது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். அதன்பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்க கடலில் புயலாக மாறக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் போன்ற பகுதிகளில், வடகடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக ராமநாதபுரத்தில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில் தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் அடுத்து வரும் 5 தினங்களுக்கு இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழைக்கான வாய்ப்பு உள்ளது. டிசம்பர் 2 மற்றும் 3 தேதிகளில் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

டெல்டா மாவட்டங்களில் புதுவை காரைக்கால் மற்றும் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. மீனவர் எச்சரிக்கை பொறுத்தவரையில் அந்தமான் மற்றும் தென்கிழக்கு கடற்பகுதியில் சூறாவளி காற்றானது, மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், தென்மேற்கு வங்கக் கடலில் 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், தென்மேற்கு வங்கக் கடலில் வரும் ஒன்றாம் தேதி 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இரண்டாம் தேதி 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீச கூடும்.

எனவே, இந்த காலகட்டத்தில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர். ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்றவர்கள் இன்றைக்குள் கரை திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வடகிழக்கு பருவ மழையை பொறுத்தவரையில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் கடந்த நவம்பர் ஒன்று முதல் தற்போது வரை பதிவான மழையின் அளவு 32 சென்டிமீட்டர் இந்த காலகட்டத்தில் இயல்பான மலையின் அளவு 35 சென்டிமீட்டர் ஆகும். இயல்பை விட விட 8 சதவீதம் குறைவு, என தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேகக் கூட்டங்கள் கடல் பகுதியில் இருந்து உருவாகி உருவாகி வருவதால் இது போன்று விட்டு விட்டு நன்கு மழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் போது எந்த பகுதியில் கரையைக் கடக்கும்,புயலாக மாறி கரையை கடக்குமா ?என்பதெல்லாம் வரக்கூடிய நாட்களில்தான் தெரியவரும், என்றார்.

  • Manickam Tagore விஜய்யால் கட்சியின் கூடாரம் காலியாகிறதா? காங்கிரஸ் தலைவர்கள் அடுத்தடுத்து பதில்!
  • Views: - 255

    0

    0