ரயில்வே ஊழியரை கத்தியால் குத்தி பணம் பறிக்க முயற்சி…! சிசிடிவி காட்சியில் சிக்கிய 5 பேர்…

Author: kavin kumar
13 February 2022, 6:27 pm

சென்னை : சென்னையில் சைக்கிளில் சென்ற ரயில்வே ஊழியரை கத்தியால் குத்தி பணம் பறிக்க முயன்ற கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை அயனாவரம் பனந்தோப்பு காலனி 5-வது தெருவில் வசித்து வருபவர் சங்கர். இவர், பெரம்பூர் ரயில்வே கேரேஜில் பிட்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு பணியை முடித்து விட்டு வீட்டிற்கு சைக்கிளில் வந்துள்ளார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் சங்கரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டி தாக்கியுள்ளனர். மேலும் அவரிடமிருந்த செல்போனை பறிக்க முயன்ற போது சங்கர் கூச்சலிட்டார். இதையடுத்து அருகில் இருந்த கல்லால் சங்கரை தாக்கிய கொள்ளை கும்பல், கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியது. இதைத் தொடர்ந்து படுகாயத்துடன் கிடந்த ரயில்வே ஊழியர் சங்கரை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ரயில்வே மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதைத் தொடர்ந்து தகவல் அறிந்த ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி சிசிடிவி காட்சியில் பதிவான கும்பலை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றிதிரிந்த 5 பேரை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது ஒருவர் தப்பி ஓடி விட்டார். 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் ரயில்வே ஊழியர் சங்கரை கத்தியால் குத்தியது இவர்கள் தான் என தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர்கள் அயனாவரத்தைச் சேர்ந்த அஜீத், வசந்த், விஜய், மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த ஓட்டேரி போலீசார், தப்பி ஓடிய அயனாவரத்தைச் சேர்ந்த இளமாறன் என்பவரை தேடி வருகின்றனர்.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 1007

    0

    0