கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களின் எண்ணிக்கை 60ஐத் தாண்டி உள்ள நிலையில் பல்வேறு கட்சியினர் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அதைத்தொடர்ந்து அதிமுகவினர் கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இந்த உண்ணாவிர போராட்டம் தொடங்கியுள்ளது.
மேலும் சென்னை எழும்பூரில் தொடங்கியுள்ள இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளும், அனைத்து எம்எல்ஏக்களும் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றுள்ளனர். குறிப்பாக திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் இருந்தும் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்கள் தொடர்பான வழக்கை சிபிஐ க்கு மாற்ற வேண்டும் என்பதை முக்கிய கோரிக்கையாக வைத்து இந்த போராட்டத்தை நடத்துகின்றனர். இதனால் அப்பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினர் அதிமுக வினருக்கு எந்த ஒரு தள்ளும் முள்ளும், அடிதடியும் இருக்கக்கூடாது என்றும், பொதுமக்களுக்கு இடையூறு கொடுக்கக் கூடாது என்றும், போராட்டம் முடிந்தவுடன் அமைதியாக அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் எனர 23 கட்டுப்பாடுகளை அறிவுறுத்தியுள்ளனர்.எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.