சென்னை மாநகராட்சி துணை மேயர், அமைச்சரின் மருமகன் மீது வழக்குப்பதிவு… உயிரிழந்தவரின் பெயரில் மோசடி..!!

Author: Babu Lakshmanan
30 August 2023, 7:39 pm

தனியார் நிறுவன அபகரிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் அமைச்சரின் மருமகன் உள்பட 6 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.

சென்னை மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த இசக்கியம்மாள் (42) சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனது கணவர் பெயர் மோகன். கடந்த 2021ம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமாகி விட்டார். அவர் உயிருடன் இந்த போது, 2014-ல் அவரின் நெருங்கிய நண்பர்களான சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார், கூட்டுறவுத் துறை அமைச்சராக இருக்கும் பெரிய கருப்பனின் மருமகன் குணசேகரன், செல்வராஜன், பாலமுருகன் மற்றும் திவாகர் ஆகிய 6 பேருடன் சேர்ந்து தனியார் நிறுவனம் ஒன்றை தொடங்கினார்.

அனைவரும் பங்குதாரர்களாகி அதை தென்சென்னை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தனர். தற்போது, என் கணவர் உயிரிழந்து விட்ட நிலையில், அதனை சாதகமாக்கி, அவருடைய பங்கை வாரிசுதாரர் என்ற அடிப்படையில் எனக்கும், எனது மகளுக்கும் வழங்காமல், போலி கணக்குகளை காண்பித்து, மோசடி செய்து விட்டனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என புகார் தெரிவித்திருந்தார்.

ஆனால், அவரது புகார் மீது போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, இசக்கியம்மாள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகளின் உத்தரவுப்படி, துணை மேயர் மகேஷ்குமார், அமைச்சரின் மருமகன் குணசேகரன் உள்ளிட்ட 6 பேர் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மோசடி உட்பட 6 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த மோசடி தொடர்பான வழக்கின் விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

  • ajith viral speech இத மட்டும் பண்ணுங்க …ரசிகர்களுக்கு மீண்டும் கோரிக்கை…துபாயில் இருந்து எமோஷனலாக பேசிய அஜித்..!