சென்னையில் திடீரென அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்… கிடுகிடுவென உயர்ந்த டாக்சி கட்டணம் ; திண்டாடிய பயணிகள்..!!

Author: Babu Lakshmanan
29 May 2023, 7:54 pm

சென்னையில் அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பயணிகள் செய்வதறியாது திகைத்துப் போகினர்.

அரசுப் போக்குவரத்து துறையை தனியார்மயமாக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சைதாப்பேட்டை , கே கே நகர், வடபழனி, ஆலந்தூர் உள்ளிட்ட பணிமனைகளை சேர்ந்த பணியாளர்கள், சென்னை ஆவடி, பூவிருந்தவல்லி, ஐயப்பந்தாங்கல் பணிமனை என பல இடங்களில் பேருந்துகளை நிறுத்தினர்.

மாலை நேரத்தில் பணி முடிந்து வீடு திரும்புவோர் என மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரம் என்பதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதனிடையே, ஜப்பானில் இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில் உடனடியாக பேச்சுவார்த்தையை துவங்குவதாக தொழிற்சங்கத்தினரிடம் அமைச்சர் சிவசங்கர் உறுதியளித்தார். இதனையடுத்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பேருந்துகளை இயக்க தொடங்கினர். இதனால், சென்னையில் மாநகர அரசு பேருந்துகள் மீண்டும் வழக்கம் போல் இயங்கத்தொடங்கின.

அரசுப் பேருந்து ஊழியாகளின் இந்த திடீர் போராட்டத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆட்டோக்கள், டாக்சிகள் கூடுதல் கட்டணத்தை வசூலிப்பதாக புகார் எழுந்தது. ஆட்டோக்களில் வழக்கத்தைவிட ரூ.75 வரை கூடுதலாகவும், சென்ட்ரல் – பல்லாவரம் டாக்ஸி கட்டணம் ரூ.550 வரை உயர்த்தப்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இதனிடையே, விதிகளுக்குட்பட்டு பயணிகளிடம் கட்டணங்களை வசூலிக்குமாறு ஆட்டோக்கள் மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

  • Actor Vinayakan controversy போதையில் செய்த அடாவடி…என்னால சமாளிக்க முடியல…மன்னிப்பு கேட்ட விநாயகன்…!