பெண்களுக்கு ரூ.1000 கொடுத்துட்டு 1000 வரிகளை உயர்த்துவதா..? இது தான் தீபாவளி ஆஃபரா..? ஜெயக்குமார் கிண்டல்..!!
Author: Babu Lakshmanan2 November 2023, 9:49 pm
சென்னை மாநகராட்சியில் வீடு கட்ட அனுமதி பெறுவதற்கான கட்டணத்தை 100 சதவிகிதம் அதிகரித்ததற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி பகுதியில் வீடு கட்டுவதற்கான அனுமதி கட்டணத்தை 100 சதவிகிதம் அதிகரித்துள்ளது. நேற்று முன் தினம் நடைபெற்றசென்னை மாநகராட்சி கூட்டத்தில் கட்டிடங்கள் கட்ட அனுமதி கட்டணத்தை அதிகரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன்படி, வீடு, கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிகம், தொழிற்சாலைகளின் 1,076 அடி மேல் கட்டிட பரப்பு இருந்தால் கட்டிடங்களுக்கான அனுமதி கட்டணம் 100 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில், குடியிருப்பு மற்றும் கல்வி கட்டிடங்களை பொறுத்தவரை முதல் 40 சதுர மீட்டர் வரை 10 சதுர மீட்டருக்கு ரூ.90, 41-முதல் 100 சதுர மீட்டர் வரையும், 10 சதுர மீட்டருக்கு ரூ.155, 101 முதல் 400 சதுர மீட்டர் வரை 10 சதுர மீட்டருக்கு 410ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், 401 சதுர மீட்டர் மற்றும் அதற்கு மேல் 10 சதுர மீட்டருக்கு 1050 என இருந்தது. இந்த தொகையானது, தற்போது ரூ.180, ரூ.310, ரூ.820, ரூ.2,100 என இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. கிணறு, குடிநீர் தொட்டி போன்றவற்றுக்கான கட்டணம், சுற்றுச்சுவருக்கான அனுமதி கட்டணமும் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் வரி உயர்வை அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
அந்த வகையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விடுத்துள்ள கண்டனப் பதிவில், “வாய்க்கு வந்த வாக்குறுதிகளை அள்ளி வீசி நிர்வாக திறனற்று ஆளும் அறனற்று ஆட்சி செய்ய இயலாத விடியா முதல்வர்! ஆயிரம் ரூபாய் கொடுக்க ஆயிரம் வரிகளை அடுத்தடுத்து வரிசையாய் உயர்த்தி வரியவர்களின் வாழ்வை இருளாக்குவது தான் அரசின் தீபாவளி ஆஃபரா??,” எனக் குறிப்பிட்டுள்ளார்.