பட்டியலினப் பெண்ணை அடித்து துன்புறுத்திய வழக்கு… திமுக எம்எல்ஏ மகன், மருமகள் ஜாமீன் கேட்டு மனு ; நீதிமன்றம் போட்ட உத்தரவு!!

Author: Babu Lakshmanan
31 January 2024, 2:38 pm

வீட்டு பணிப்பெண்ணை அடித்து துன்புறுத்திய வழக்கில் கைதான திமுக எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் ஜாமீன் மனு மீதான விசாரணையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த 18 வயதுடைய 12-ம் வகுப்பு படித்த இளம்பெண் ஒருவரை, குடும்பச் சூழல் காரணமாக அவரது பெற்றோர் சென்னையை அடுத்த பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏவான இ.கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில், வீட்டு வேலை செய்ய 7 மாதங்களுக்கு முன்னர் அனுப்பி வைத்துள்ளனர்.

திருவான்மியூர், 7-வது அவென்யூவில் வசித்து வந்த ஆண்ட்ரோவும், அவரது மனைவி மெர்லினாவும் அந்த இளம்பெண்ணை அதிகளவில் கொடுமைப்படுத்தியதாகவும், அவரது கை, கன்னம், முதுகு உட்பட பல்வேறு இடங்களில் சூடு வைத்து சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது.

வேலை பிடிக்கவில்லை ஊருக்குப் போகிறேன் என கிளம்பிய அந்தப் பெண்ணை அனுப்ப மறுத்து கட்டாயப்படுத்தி தங்க வைத்துள்ளனர். மேலும், பேசியபடி சம்பளத்தை கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின் பேரில் இருவர் மீதும் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த நிலையில் தலைமறைவாக இருந்த ஆன்டோ மதிவாணன் மற்றும் மெர்லினாவை அண்மையில் ஆந்திராவில் வைத்து கைது செய்தனர்.

இந்த நிலையில், ஜாமீன் கோரி இருவரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணைக்கு வந்த போது, ஜாமீன் மனுவுக்கு காவல்துறையும், பாதிக்கப்பட்ட பெண்ணும் பதிலளிக்க சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!