ஐயப்ப பக்தர்கள் கற்பூரம் ஏற்றினால் ரூ.1,000 அபராதம்.. ரயில்வே முக்கிய அறிவிப்பு!
Author: Hariharasudhan30 November 2024, 11:58 am
சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தர்கள் தங்களது ரயில் பயணத்தின் போது கற்பூரம் ஏற்றினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை: இதுதொடர்பாக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், “சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு யாத்திரை செல்லும் பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் சிலர், தங்களது ரயில் பயணத்தின் போது கற்பூரம் ஏற்றி வைத்து பூஜை செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. எனவே, பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ரயில் மற்றும் ரயில் நிலைய வளாகங்களில் நெருப்பு ஏற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் வெடிக்கும் பொருட்களுடன் பயணிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். எனவே, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய ரயில்களில் கற்பூரம் ஏற்றுவதையோ அல்லது எரியக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்வதையோ பயணிகள் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
இதையும் படிங்க: கோவையில் வளர்ப்பு நாய் உயிரிழந்த விவகாரத்தில் திருப்பம்.. உரிமையாளர் மீது பாய்ந்த வழக்கு!
மேலும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய ரயில்வே அதிகாரிகள் உடன் பயணிகள் ஒத்துழைக்க வேண்டும். அதேபோல், யாரேனும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால், 130 என்னும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.