அதிகாரப் போட்டி…? திமுக மாநகராட்சி கவுன்சிலர் – திமுக வட்டச்செயலாளர் இடையே மோதல்… கவுன்சிலரின் கார் கண்ணாடி உடைப்பு…!!

Author: Babu Lakshmanan
26 July 2023, 9:30 pm

சென்னையில் சேதமடைந்த குடிசை மாற்று வாரிய வீடுகளை பார்வையிடச் சென்ற திமுக மாநகராட்சி கவுன்சிலர், திமுக வட்டச் செயலாளரின் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

சென்னை – ராமகாமத்துபுரம் பகுதியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் 500 வீடுகள் கட்டப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. அதில், ஓ பிளாக்கில் இருந்த ஒரு வீட்டின் பால்கனி இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத நிலையில், அதனை பார்வையிடுவதற்காக, திமுக வட்டச்செயலாளர் விஷ்ணு என்பவர் மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து சென்றதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த அப்பகுதி கவுன்சிலப் பிரேமா தனது கணவருடன் அங்கு சென்றுள்ளார். இதனால், இருதரப்பினரிடையே, வாக்குவாதம் ஏற்பட்டு, மோதல் உருவாகியது. இதில், கவுன்சிலரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திமுக மாநகராட்சி கவுன்சிலர், திமுக வட்டச் செயலாளரின் அதிகாரப்போட்டியில் இருவரும் ஈடுபட்டு வருவதால் தங்களின் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர்.

  • திடீரென மொட்டையடித்த சுந்தர்.சி.. ரூ.1 லட்சம் நன்கொடை.. விறுவிறுப்படையும் மூக்குத்தி அம்மன் 2!