அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலி… சென்னையில் சோகம்.. வெளியானது பகீர் சிசிடிவி காட்சி..!!!
Author: Babu Lakshmanan11 July 2023, 8:52 am
சென்னை மாதவரத்தில் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலியான சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
சென்னை வியாசர்பாடி மேல்பட்டி பொன்னப்ப முதலி தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் ராஜேஷ்குமார் இவர் பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் +2 பயின்று வருகிறார். பள்ளிப் படிப்பு நேரம் போக மீதமுள்ள நேரங்களில் இவர் பார்ட் டைம் ஆக கேட்டரிங் சர்வீஸ் போன்ற பணிகளில் தொழிலாளியாக ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இவர் மாதவரம் அடுத்த வடபெரும்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கேட்டரிங் உதவியாளர் பணியினை முடித்து விட்டு, அவருடைய நண்பர் செந்தில்குமார் என்பவரின் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து கொண்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார்.
இந்த நிலையில், மாதவரம் ரவுண்டான அருகில் சென்னை செங்குன்றத்திலிருந்து வள்ளலார் நகர் நோக்கி செல்லும் மாநகர பேருந்தானது, சென்னை மாதவரம் ஆந்திரா புறநகர் பேருந்து நிலையத்தில் பயணிகளை அழைத்துச் செல்ல உள்ளே வருகை தந்துள்ளது.
அப்பொழுது, எதிர்பாராத விதமாக எதிர் திசையில் இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த ராஜேஷ் குமாரும், செந்தில் குமாரும் தங்களது இருசக்கர வாகனம் பேருந்து மீது மோதி விடாமல் இருப்பதற்காக பிரேக் பிடித்த போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் தனது நிலைப்பாட்டை மீறி அரசு பேருந்தின் மீது மோதி பின்பக்க சக்கரத்தில் இருவரும் சிக்கினார்கள்.
இதில் அதிர்ஷ்டவசமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த செந்தில்குமார் நூல் இலையில் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். பின்னால் அமர்ந்து வந்த ராஜேஷ்குமார் மீது அரசு பேருந்து சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் தலை நசுங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதனை அடுத்து, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு அவசர ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை கொண்டு செல்ல முயற்சித்த போது அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சென்னை மாதவரம் குற்றப்பிரிவு புலனாய்வு போலீசார் மாநகர பேருந்து ஓட்டுநர் சங்கர் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த பகுதிகளில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள் முறையாக செயல்படாமல் இருப்பதே இது போன்ற விபத்திற்கு காரணம் என அந்த பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.