கோவை ஒப்பந்ததாரர்களுக்கு தகுதிச் சான்றிதழை உடனடியாக வழங்குக ; தமிழக நெடுஞ்சாலைத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Author: Babu Lakshmanan
23 August 2023, 2:59 pm

கோவையைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்களுக்கு தகுதிச் சான்றிதழ்களை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக நெடுஞ்சாலைத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ. 120 கோடி மதிப்பிலான பல்வேறு ரோடு பணிகளுக்கான ‘டெண்டர்’ கோரப்பட்டுள்ளது. இ-டெண்டர் முறையில் ஒப்பந்தப்புள்ளி பதிவேற்றம் செய்வதற்கான அவகாசம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.

முன்னதாக, தகுதியான ஒப்பந்ததாரர்களா என்பதை அறியும் விதமாக, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களிடம் உள்ள இயந்திரங்கள் மற்றும் பிளான்ட்டுகளை நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுப்பாடு பிரிவினர் ஆய்வு செய்து சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்பது விதியாகும். அச்சான்றிதழை ஒப்பந்தப்புள்ளியுடன் இணைத்து, பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பது ஒப்பந்ததாரர்களுக்கு விதிக்கப்பட்ட முக்கியமான நிபந்தனையாகும்.

ஆனால், கோவையில் குறிப்பிட்ட சில ஒப்பந்ததாரர்கள் மட்டும், டெண்டர் கோருவதற்கு சலுகை அளிக்கும் வகையில், மற்ற ஒப்பந்ததாரர்களுக்கு அச்சான்றிதழ் வழங்குவதில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், ‘ஏற்கனவே டெண்டர் எடுத்து, பணியை முழுமையாக முடிக்காத நிறுவனங்களுக்கு, மீண்டும் டெண்டர் கொடுக்கக்கூடாது என்றும, சில நிறுவனங்கள் 100 கோடி ரூபாய் மதிப்புக்கு டெண்டர் எடுத்து, இன்னும் செய்து முடிக்காமல், தாமதித்து வரும் நிலையில், அந்த நிறுவனங்களுக்கே மாநில நெடுஞ்சாலைத்துறையில் மீண்டும் டெண்டர் தருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மற்ற தகுதி வாய்ந்த ஒப்பந்ததாரர்களுக்கு டெண்டர் பெற முடியாத அளவுக்கு, தகுதி சான்றிதழ் வழங்குவதில் பாகுபாடு காட்டுவதாக தெரிவித்துள்ளனர்.

கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கோவையைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்களுக்கு தகுதிச் சான்றிதழ்களை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிட்டதுடன், இந்த வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 303

    0

    0