நீங்க சொல்றது சரிதான்…ஆனால் : தருமபுரம் ஆதீனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
Author: Udayachandran RadhaKrishnan12 May 2022, 1:30 pm
சென்னை : ஆதீனத்தின் மனுவை பரிசீலித்து உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பட்டணப் பிரவேச நிகழ்ச்சிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி அரசிடம் விண்ணப்பிக்கலாம் என்று தருமபுரம் ஆதீனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆதீனத்தின் மனுவை பரிசீலித்து உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப்பிரவேசத்தின் போது சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ராஜப்பிரகாசம் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த நிலையில் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற சென்னையை சேர்ந்த மனுதாரரின் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இதனிடையே, மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டணப் பிரவேச விழாவில் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல தடை விதித்து, மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டிருந்தார். இதற்கு பாஜக, பாமக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இதனையடுத்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், பட்டினப்பிரவேச விழாவில் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதனை தொடர்ந்து வரும் 22- ஆம் தேதி, பட்டண பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், பட்டணப் பிரவேச நிகழ்ச்சிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி விண்ணப்பிக்கும்படி தருமபுரம் ஆதீனத்துக்கு அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், ஆதீனத்தின் மனுவை பரிசீலித்து உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.