பாலியல் தொல்லை கொடுத்த ஹவுஸ் ஓனர் மருமகன்… மாமியாரை தீர்த்துக்கட்டிய பெண் ; சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

Author: Babu Lakshmanan
13 March 2023, 7:07 pm

சென்னையில் வீட்டு உரிமையாளரை கொலை செய்த வழக்கில் பெண் மற்றும் அவரது சகோதரரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை – தரமணியை சேர்ந்த மூதாட்டி சாந்தகுமாரி என்பவர் வீட்டில் முகத்தில் காயத்துடன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த போலீசார், மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அதில், வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த மூன்றரை லட்சம் ரூபாய் மாயமாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில், மூதாட்டியின் வீட்டில் குடியிருந்த பெண் மற்றும் அவரது சகோதரரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், திடுக்கிடும் தகவல் வெளியாகின.

அதாவது, மூதாட்டியின் வீட்டில், வாடகைக்கு குடியிருந்த ஸ்ரீஜா மற்றும் அவரது சகோதரர் விஜய்பாபு ஆகியோர் தான், பணத்திற்காக இந்த கொலையை செய்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில், உயிரிழந்த சாந்தகுமாரியின் மருமகன், ஸ்ரீஜாவை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்க வேண்டாம் என்றும், பணம் தருவதாகக் கூறி சாந்தகுமாரி ஏமாற்றியதாக சொல்லப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த ஸ்ரீஜாவும், அவரது தம்பி விஜய்பாபுவும், பீரோவில் இருந்து மூன்றரை லட்சம் ரூபாய் பணத்தை திருடியபோது, சாந்தகுமாரி விழித்துக் கொள்ளவே, அவரை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  • my scenes were deleted in goat movie said by black padi சண்ட போட்டு படத்துல நடிச்சேன்; ஒரு பயனும் இல்ல- வேதனையில் GOAT பட நடிகர்… அடப்பாவமே!