சென்னை ஐஐடி-யில் பணி நியமனம் செய்ததில் முறைகேடு : டிஜிபி அலுவலகத்தில் தலீத் அமைப்பு புகார்
Author: Babu Lakshmanan24 June 2022, 10:04 am
சென்னை : சென்னை ஐஐடி நிறுவனத்தில் பணி நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக டிஜிபி சைலேந்திர பாபுவிடம் தலித் ஆக்சன் கமிட்டியின் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இயங்கி வரும் உயர் கல்வி நிறுவனமான ஐஐடியில், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு வேலைவாய்ப்பில் வழங்க வேண்டிய 22.5 சதவிகிதப்படி வழங்காமல் வெறும் 2.5 சதவிகிதம் மட்டுமே வழங்கப்பட்டு பேராசிரியர், உதவி பேராசிரியர் பணி இடங்களை நிரப்புவதில் முறைகேடு நடைபெறுவதாக தலித் ஆக்சன் கமிட்டி எனும் அமைப்பின் பொதுச்செயலாளர் A.M.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், உயர் சாதியினருக்கே பணி வழங்கப்படுவதாகவும், இது குறித்து பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்றும் அவர் புகார் தெரிவித்துள்ளார். எனவே, சென்னை ஐஐடி பணி நியமனம் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை வழங்கக்கோரி விண்ணப்பித்துள்ளார்.
இது தொடர்பாக, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணொலி மூலம் நடைபெற்ற விசாரணையில், ஐஐடி பதிவாளர் ஜானே பிரசாத், மத்திய தகவல் ஆணையர் அமித்தா பாண்டே, தலித் அமைப்பின் பிரதிநிதி A.M.ராஜா ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, சென்னை ஐஐடி நிறுவனம் விரைவில் பணி நியமனம் குறித்து தகவல்களை அளிக்க மத்திய தகவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை ஐஐடி யில் பணி நியமனத்தில் நடைபெற்றுள்ள முறைகேட்டை விசாரிக்க வேண்டும் என்றும், டிஜிபி சைலேந்திரபாபுவிடம் புகார் மனு கொடுத்திருப்பதாகவும் A.M.ராஜா தெரிவித்தார்.