சென்னையில் கஞ்சா கடத்திய வடமாநில நபர் உள்பட 2 பேர் கைது : 19 கிலோ கஞ்சா பறிமுதல்
Author: Babu Lakshmanan23 August 2022, 3:48 pm
சென்னை : ஓட்டேரி பகுதியில் கஞ்சா கடத்தி வந்த வடமாநில நபர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பெருநகரில் “போதை பொருள் தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
P-2 ஓட்டேரி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (22.08.2022) மாலை மங்களபுரம், பெரம்பூர் நெடுஞ்சாலையிலுள்ள, தனியார் மருத்துவமனை அருகே பைகளுடன் நடந்து வந்த 2 நபர்களை விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின்பேரில், அவர்கள வைத்திருந்த பைகளை சோதனை செய்த போது, அதில் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அதன்பேரில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி வந்த 1.சல்மோன், வ/32, த/பெ.சாதிக் மியா, ரங்கவாடி மாவட்டம், திரிபுரா மாநிலம், 2.ஜெகன், வ/29, த/பெ.பச்சையப்பன், மல்லிகை அவென்யூ நகர், கொளத்தூர் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 19 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் வடமாநிலத்திலிருந்து ரயில் மூலம் கஞ்சா எடுத்து வந்து பெரம்பூர் இரயில் நிலையம் பின்புறம் இறங்கி வரும் வழியில் பிடிபட்டது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட எதிரிகள் சல்மோன் மற்றும் ஜெகன் ஆகியோர் விசாரணைக்கு பின்னர் ஆஜர்செய்யப்பட உள்ளனர்.