சென்னையில் வழக்கறிஞர் கொடூரக் கொலை… சரணடைந்த 3 குற்றவாளிகள் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல் : விழுப்புரம் நீதிமன்றத்தில் சலசலப்பு..!!
Author: Babu Lakshmanan27 March 2023, 5:14 pm
சென்னையில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்த மூன்று குற்றவாளிகளை போலீசார் சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்ற போது, வழக்கறிஞர்கள் தாக்கியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை துரைப்பாக்கம் ராஜீவ் நகரை சேர்ந்த வழக்கறிஞர் ஜெய்கணேஷ் . கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பிரபல ரவுடி சிடி.மணி துப்பாக்கியுடன் கைதான வழக்கு ஒன்றில் இவரும் உள்ளார். அதன்பிறகு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் இவரை, நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கத்தியால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.
இக்கொலை சம்ப குற்றவாளிகளை துரைப்பாக்கம் போலீசார் தேடி வந்த நிலையில், இன்றைய தினம் வழக்கறிஞர் கொலைவழக்கில் சம்பந்தப்பட்ட ஸ்ரீதர், முருகன், பிரவீன் ஆகிய மூவரும் விழுப்புரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 1ல் சரணடைந்தனர்.
இதனையடுத்து, விழுப்புரம் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஒன்றிணைந்து வழக்கறிஞரை மூவரும் கொலை செய்துள்ளதால், மூவர் சரணடைந்த வழக்கில் விழுப்புரம் வழக்கறிஞர்கள் ஆஜராக மாட்டோம் என நீதிபதி ராதிகாவிடம் முறையிட்டு ஆட்சேபனை தெரிவித்தனர்.
இதனையடுத்து, சரணடைந்த மூன்று பேர் தரப்பில் சரணடைந்ததற்காக போடப்பட்ட மனுவை குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் திரும்ப பெற்று கொண்டார். அதனை தொடர்ந்து, இவ்வழக்கினை விசாரித்த நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ராதிகா குற்றவாளிகளை வருகின்ற 5 ஆம் தேதி வரை வேடம்பட்டு சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
அந்த உத்தரவின் பேரில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நீதிமன்றத்திலிருந்து விழுப்புரம் வேடம்பட்டு சிறைச்சாலைக்கு அழைத்து சென்றபோது, வழக்கறிஞரையே கொலை செய்துவிட்டு இங்கு வந்து ஆஜராகிவீர்களா என கூறி விழுப்புரம் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் குற்றவாளிகளை தாக்க முற்பட்டனர்.
அப்போது, காவல் துறையினருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு கைகலப்பாக மாறியதால் களேபரமாக மாறி நீதிமன்றம் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தள்ளு முள்ளு ஏற்பட்டபோது வழக்கறிஞர்கள் காவல்துறையினரையும் தாக்கினர். இதனை தொடர்ந்து குற்றவாளிகளை போலீசார் பாதுகாப்பாக வேன் மூலம் சிறைக்கு அழைத்து சென்றனர். இதனால் நீதிமன்ற வளாகமே பரபரப்பாக காணப்பட்டது.
0
0