பாட்டில்களில் தாய்ப்பால் அடைத்து விற்பனை… அதிகாரிகள் நடத்திய திடீர் ரெய்டு.. வசமாக சிக்கிய மருந்து கம்பெனி!!
Author: Babu Lakshmanan31 May 2024, 1:15 pm
சட்டவிரோதமாக பாட்டில்களில் தாய்ப் பாலை அடைத்து விற்பனை செய்து வந்த மருந்து நிறுவனத்திற்கு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சென்னை மாதவரம் பகுதிக்கு உட்பட்ட கேகேஆர் கார்டன் ஒன்றாவது தெருவில் முத்தையா என்பவருக்கு சொந்தமான லைப் வேக்சின் ஸ்டோர் என்கின்ற பெயரில் மருந்து மொத்தம் மற்றும் சில்லறை வணிகை மையம் செயல்பட்டு வருவதாக தெரிய வருகிறது.
இந்த மருந்து வணிக மையத்தினை சென்னை மாதவரம் தபால் பெட்டி பகுதியை சேர்ந்த முத்தையா என்பவர் நடத்தி வருகிறார். இந்த நிலையில், இவரது மருந்து கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால்கள் பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலை அடுத்து சம்பந்தப்பட்ட லைப் வேக்சின் ஸ்டோர் என்கின்ற இந்த மருந்து கடையில் திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து வந்திருந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
மேலும் படிக்க: லிஃப்ட் கொடுப்பதாகச் சொல்லி 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை ; திமுக பிரமுகர் போக்சோவில் கைது…!!!
அந்த திடீர் சோதனையில் சுமார் 50க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் தாய்ப்பால்கள் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த பாட்டில்களை பறிமுதல் செய்த திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளர் முத்தையாவிலும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், இந்த தாய்ப்பால்கள் இவருக்கு எங்கிருந்து எப்படி கிடைத்தது. இதனை எப்படி இவர் பதப்படுத்தி விற்பனையில் ஈடுபட்டு வந்தார் என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், இவர் விற்பனை செய்து வந்த லைப் வேக்சன் என்கின்ற மருந்து மொத்த வணிக மையத்திற்கு தற்போது பூட்டு போடப்பட்டு, முத்தையா அவர்களை விசாரணை வளையத்துக்குள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கொண்டு வந்துள்ளனர். இது தொடர்பாக அங்கு கைப்பற்றப்பட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட பாட்டில்களை தற்போது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனைக்காக அரசு ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்ததாக தெரிய வருகிறது.