தீரவே தீராத மின்வெட்டு… கொதித்தெழுந்த சென்னை மக்கள்… நள்ளிரவில் அண்ணா சாலையில் சாலைமறியல்!!

Author: Babu Lakshmanan
26 May 2022, 12:42 pm

சென்னை : தொடர் மின்வெட்டைக் கண்டித்து சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே உள்ள அண்ணா சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் மீண்டும் கடும் மின்வெட்டு ஏற்பட்டது. கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில், அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, பொதுத்தேர்வு எழுதும் 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

power cut 4 - updatenews360

கடும் விமர்சனங்களை திமுக அரசு எதிர்கொண்ட நிலையில், மத்திய தொகுப்பில் இருந்து வழங்கப்படும் மின்சாரம் தடைபட்டதாலும், நிலக்கரி பற்றாக்குறையினாலும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தார். இதைத் தொடர்ந்து, மின்வெட்டு பிரச்சனை தமிழகத்தில் இல்லை என்றும், இனியும் இந்த பிரச்சனை இருக்காது என்று அமைச்சர் அண்மையில் தெரிவித்து வந்தார்.

குறிப்பாக, கடந்த மே 10 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையின் காரணமாக கடந்த மே 1ம் தேதி 1.44 லட்சம் யூனிட்டுகளையும், 8ம் தேதி அன்று 4.5 லட்சம் யூனிட்டுகளையும் யூனிட் ஒன்று ரூ. 12 என கணக்கிட்டு வெளிமாநிலங்களுக்கு வெளிச்சந்தையில் விற்பனை செய்துள்ளது. தமிழகத்தில் மின்வெட்டு போன்ற மாயத்தோற்றத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்துவது உண்மைக்கு புறம்பான செய்தி என்பதோடு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தமிழ்நாட்டு மக்களுக்கு தொடர்ந்து தங்கு தடையில்லா மின்சாரத்தை வழங்குவது அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.” என விளக்கமளித்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி மின்வெட்டு ஏற்படாது என்று கூறியிருந்தாலும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மின்வெட்டு தொடர்பான புகார்கள் வந்து கொண்டேதான் உள்ளது. பல்வேறு காரணங்களை சொல்லி மின் தடை செய்யப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுவதை காண முடிகிறது.

இந்த நிலையில், தொடர் மின்வெட்டை கண்டித்து நேற்று இரவு சென்னையின் மிக முக்கிய சாலையான அண்ணா சாலையில் பொதுமக்கள் இரவு திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்வெட்டை தடுத்து நிறுத்துவதற்கான உறுதியான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?