நாங்களே சொல்லுவோம்.. Fine-ம் போடுவோம்.. வேளச்சேரிவாசிகள் குமுறல்!
Author: Hariharasudhan14 October 2024, 7:13 pm
சென்னை வேளச்சேரியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக மேம்பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.
சென்னை: கடந்த இரு நாட்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், அக்.15 முதல் 18 வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கும் மற்றும் வடமாவட்டங்களுக்கும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
இதனையொட்டி, சென்னை மாநகராட்சி தரப்பில் 100க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த நான்கு நாட்களுக்கு 24 மணி நேரமும் ஷிப்ட் முறையில் வேலை செய்வதற்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அரக்கோணம் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் சென்னை விரைந்துள்ளன.
இதையும் படிங்க: நாங்க எப்பவுமே உஷார்தான்.. வேளச்சேரி பாலத்தில் கார்களை பார்க்கிங் செய்த உரிமையாளர்கள் ; வீடியோ!
இதனிடையே, சென்னை வேளச்சேரி பகுதி மக்கள் வேளச்சேரி – பள்ளிக்கரணை மேம்பாலத்தில் தங்களது கார்களை நிறுத்தி வைத்தனர். ஏனென்றால், சென்னையில் பெய்யும் மழைநீர் ஓடி வந்து வேளச்சேரி சதுப்பு நிலம் வந்தடையும். மேலும் கடந்த முறை மழை பெய்தபோது வேளச்சேரி பகுதி முழுவதும் பெருத்த சேதம் அடைந்தது. அதிலும், பலரது கார்கள் வெள்ள நீரில் மூழ்கி சேதத்தை உண்டாக்கியது.
இந்த நிலையில், வேளச்சேரி – பள்ளிக்கரணை மேம்பாலத்தில் நின்றிருந்த கார்களுக்கு ஒரு நாளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், ரூபாய் போனாலும் பரவாயில்லை, காரின் பாதுகாப்பு முக்கியம் என அதன் உரிமையாளர்கள் ஊடகம் வாயிலாக தெரிவித்துள்ளனர். அதேநேரம், பருவமழை முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழக அரசு, இந்த விஷயத்தில் தவறாக நடக்கிறது என பொதுமக்கள் தங்கள் வேதனையை தெரிவித்தனர்.