தாயுடன் தகாத உறவு… பல ஆண்டுகளாக மிரட்டி மகளுக்கும் பாலியல் தொந்தரவு… போக்சோவில் காவலர் கைது
Author: Babu Lakshmanan8 September 2022, 12:31 pm
சென்னை அருகே தகாத உறவில் இருந்த பெண்ணின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த காவலர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
ஆலந்தூர் காவல் குடியிருப்பில் வசித்து வருபவர் பாண்டியராஜ். 50 வயதான இவர் சென்னை மாநகர காவல் துறையில், விஐபிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், கணவனை இழந்து மகளுடன் வசித்து வரும் பெண்னுடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.
கணவனை இழந்த தனக்கு காவலரின் அரவணைப்பு பாதுகாப்பானது என்று நம்பி, அந்தப் பெண்ணும் காவலர் பாண்டியராஜனிடம் நெருக்கமாக பழகி வந்துள்ளார். தனது உடல்தேவைக்கு அந்தப் பெண்ணை பயன்படுத்தி வந்த அந்தக் காவலர், அந்தப் பெண்ணின் மகளையும் சித்ரவதை செய்து வந்துள்ளார்.
2017ம் ஆண்டு அந்தப் பெண்ணின் குழந்தைக்கு 13 வயது பூர்த்தி அடைந்துள்ளது. அன்று முதல், நாட்கள் செல்ல செல்ல சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். தற்போது, அந்தப் பெண் கல்லூரிக்கு செல்லும் நிலையிலும், மிரட்டி மிரட்டி, தனது இச்சையை தீர்த்து வந்துள்ளார்.
காவலரின் கொடுமை தாங்காத அந்த சிறுமி, காவல்நிலையத்திற்கு சென்று புகாராக அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், காவல் உதவி ஆய்வாளர் பாண்டியராஜ், பாலியல் தொந்தரவு மற்றும் வன்கொடுமை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, பாண்டியராஜனை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.