கவுன்சிலர் சீட்டில் உட்கார நீ யார்..? கவுன்சிலரின் கணவர் மீது தாக்குதல் நடத்திய திமுக பிரமுகர் ; உட்கட்சி பூசலால் பரபரப்பு..!!
Author: Babu Lakshmanan16 February 2024, 8:17 am
சென்னை மாநகராட்சி 153வது வார்டு கவுன்சிலரின் கணவர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெருநகர மாநகராட்சி வளசரவாக்கம் 11வது மண்டலம் 153 அது வார்டு கவுன்சிலராக இருப்பவர் சாந்தி ராமலிங்கம். போரூரில் 153வது வார்டு மாநகராட்சி டிவிசன் அலுவலகம் உள்ள நிலையில், கவுன்சிலர் அமரக்கூடிய சீட்டில் கவுன்சிலரின் கணவர் ராமலிங்கம் அமர்ந்து கொண்டிருந்தார். அங்குராமாபுரம் 154 வது வார்டு திமுக சென்னை தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி வந்துள்ளார்.
அப்போது, கவுன்சிலரின் கணவர் ராமலிங்கத்திடம், அலுவலகத்தில் புகுந்து கவுன்சிலர் சீட்டில் உட்கார நீ யார்..? என கேட்டு, கவுன்சிலரின் கணவரை இருக்கையில் இருந்து எழுப்பி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இந்த நிலையில், ரவியும் கவுன்சிலரின் கணவர் ராமலிங்கமும் மாறி, மாறி தாக்கி கொண்டனர். மேலும், இந்த போரூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் இரு தரப்பும் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே சண்டை எழ காரணம் எனவும், அதன் காரணமாக கவுன்சிலரின் அறைக்குள் புகுந்து கவுன்சிலரின் கணவரை திமுக பிரமுகரே தாக்கியது தெரிய வந்தது.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. திமுக பிரமுகர்களே மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் ஏதும் பதிவாகவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிய நிலையில், கட்சி தலைமை தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுகவினர் தரப்பிலேயே கோரிக்கையானது எழுந்துள்ளது.