காதலியை ரயில்முன் தள்ளி கொலை செய்த காதலன்… பரங்கிமலை ரயில்நிலையத்தில் கொடூரம்…. 7 தனிப்படை அமைத்து விசாரணை..!!
Author: Babu Lakshmanan13 October 2022, 6:15 pm
சென்னை: காதல் விவகாரம் தொடர்பாக எழுந்த சண்டையில் சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் காதலியை ரயில் முன் தள்ளிவிட்டு காதலனே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிண்டியை அடுத்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதிஷ் (23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 2ம் ஆண்டு கல்லூரி மாணவியான சத்யாவுடன் (20) பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வழக்கம் போல, பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்று இருவரும் பேசிக்கொண்டு இருந்த போது, அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த சதீஷ், பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன் சத்யாவை தள்ளிவிட்டுள்ளார். இதில் தண்டவாளத்தில் விழுந்த சத்யா, தலை துண்டாகி உயிரிழந்தார்.
இதையடுத்து, காதலியை கொலை செய்த சதீஷ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதையறிந்த ரயில்வே போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய சதீஷை பிடிக்க ரயில்வே போலீசார் சார்பில் 4 தனிப்படைகளும், காவல் ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகளும் அமைத்துள்ளனர்.
காதலித்த பெண்ணுடன் ஏற்பட்ட சண்டையால் ரயில் முன் தள்ளி காதலனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.