சென்னையில் பால் தட்டுப்பாடு ; வரிசையில் நின்று வாங்கும் பொதுமக்கள் ; கூடுதல் விலைக்கு விற்பனை என புகார்!!
Author: Babu Lakshmanan6 December 2023, 10:12 am
சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிது பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் கடந்த 2ம் தேதி முதல் 3 தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகள் குளம்போல காட்சியளிக்கின்றன. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொருட்களை இழந்து பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் வடிந்தாலும், குறிப்பாக, வேளச்சேரி, தாம்பரம் மற்றும் ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் இன்னமும் தத்தளித்து வருகின்றன. இதனால், பால், உணவு மற்றும் மின்சாரம் என பொதுமக்கள் அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றனர்.
அதேபோல, அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தனித்தனி குழுக்களாக பிரிந்து வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் ஆவின் பால் கிடைக்காமல் பொதுமக்கள் அவதியுற்றனர். குழந்தைகள் வைத்திருப்பவர்கள் பெரும் இன்னலை சந்தித்தனர். பால் பூத்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பால் பாக்கெட்டுக்களை வாங்கிச் செல்கின்றனர்.
ஒருவருக்கு ஒரு பாக்கெட் மட்டுமே வழங்குவதாகவும், அதுவும் வழக்கமான விற்பனை விலையை விட ரூ.10 கூடுதலாக வசூலிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே, இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
0
0