சர்ச்சையில் சிக்கிய VR மால்.. 23 வயது பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் : காவல்துறை நடவடிக்கை எடுக்குமா..?
Author: Babu Lakshmanan11 February 2023, 9:45 am
சென்னை அண்ணா நகரில் செயல்பட்டு வருகிறது வி.ஆர் மால். சென்னையில் உள்ள பிரபல மால்களில் இதுவும் ஒன்று. ஏற்கனவே, அனுமதியில்லாமல் மியூசிக் பார்ட்டி, பார்கள் உள்ளிட்டவை நடத்தியதாக இந்த மால் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. இந்த நிலையில், தற்போது புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது.
வி.ஆர். மாலில் தனக்கு நேர்ந்த மோசமான சம்பவத்தை 23 வயதான பெண் ஒருவர் சமூகவலைபக்கத்தில் பகிர்ந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, சமூகவலைதள பக்கத்தின் மூலம் பழக்கம் ஏற்பட்ட ஆண் நண்பர் ஒருவர், வி.ஆர். மாலில் படம் பார்க்க அழைத்துச் சென்றதாகவும், அங்கு தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் பதிவிட்டுள்ளார். குறிப்பாக, அங்கிருக்கும் குறைந்த கண்காணிப்புகள் மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத சில பகுதிகளில் அழைத்துச் சென்று தவறாக நடந்துகொள்ள முயன்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவியது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக பலர் கருத்துக்களை தெரிவித்தனர். மேலும், வி.ஆர். மாலில் நடக்கும் இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.