இஸ்லாமிய கட்சியினரை சந்திக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்.. கண்துடைப்பாக இருக்கக்கூடாது : எஸ்டிபிஐ கண்டிஷன்!
Author: Udayachandran RadhaKrishnan17 February 2024, 1:23 pm
இஸ்லாமிய கட்சியினரை சந்திக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்.. கண்துடைப்பாக இருக்கக்கூடாது : எஸ்டிபிஐ கண்டிஷன்!
எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 3.5% இருந்து 5% ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும். 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் 26 பேரையும் கருணை அடிப்படையில் விரைவாக விடுதலை செய்திட வேண்டும்.
பள்ளிவாசல்கள் மற்றும் தேவாலயங்களை கட்டிட எளிமையான முறையில் அனுமதி வழங்கிட உரிய சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டும். தமிழக முஸ்லிம்களின் வாழ்நிலையை அறிந்திட சச்சார் கமிட்டி போன்றதொரு கமிட்டி அமைக்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்புகளில் 3.5% இடஒதுக்கீட்டை முறையாக பகிர்ந்து வழங்கிட சமவாய்ப்பு ஆணையத்தை அமைத்திட வேண்டும்.
தமிழக அரசு பல்கலைக்கழகங்களில் ஒரு முஸ்லிம் கல்வியாளரை துணைவேந்தராக நியமித்திட வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (TNPSC) உறுப்பினராக ஒரு முஸ்லிம் பிரதிநிதியை நியமித்திட வேண்டும்.
முஸ்லிம்களாக மதம் மாறிய வகுப்பினருக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான BCM பிரிவில் இடஒதுக்கீடு வழங்கிட சட்ட திருத்தம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை எஸ்டிபிஐ கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. கடந்த ஜனவரி 7 அன்று மதுரையில் நடைபெற்ற வெல்லட்டும் மதச்சார்பின்மை மாநாட்டில் மேற்கண்ட கோரிக்கைகளை தீர்மானங்களாக நிறைவேற்றி தமிழக அரசை வலியுறுத்தியது.
சிறுபான்மை கிறிஸ்தவ சமூகத்தினரை அழைத்து கூட்டத்தை நடத்தியது போன்று, சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினரையும் அழைத்து கோரிக்கைகளைக் கேட்டு அதனையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி அப்போது வலியுறுத்தியது.
இந்நிலையில், சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினரை சேர்ந்தவர்களை நாளைய தினம் தமிழக முதல்வர் அவர்கள் அழைத்து பேச இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது எதிர்வரும் தேர்தலுக்கான கண்துடைப்பு நடவடிக்கையாக இல்லாமல், சிறுபான்மை சமூக மக்கள் தொடர்ச்சியாக முன் வைக்கும் கோரிக்கைகளை உண்மையிலேயே நிறைவேற்றும் கூட்டமாக அது அமைய வேண்டும் என்பதே எஸ்டிபிஐ கட்சியின் விருப்பமாக உள்ளது.
சிறுபான்மை முஸ்லீம் சமூகத்தின் கோரிக்கைகளை, அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் கூட்டமாக நாளைய கூட்டம் அமைய வேண்டும். அதுவல்லாமல் இந்த அரசு சிறுபான்மை சமூகத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்கிற ரீதியில் வெறும் கருத்துக்கேட்பு, கண்துடைப்பு கூட்டமாக, அறிவிப்பு கூட்டமாக அது நடைபெறுமானால், இந்த அரசுக்கு சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினரின் கோரிக்கைகள் மீது இதுநாள் வரையில் எவ்வித அக்கரையும் இல்லை என்பதாகவே அறிய முடியும்.
ஆகவே, சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகள், வாழ்வாதாரம், பிரதிநிதித்துவம் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பான அறிவிப்புகளை தமிழக முதல்வர் அவர்கள் வெளியிட வேண்டும். வெறும் வாக்குறுதிகளாக அல்லாமல், அதனை நிறைவேற்றும் நடவடிக்கைகளாக தமிழக முதல்வர் அந்த அறிவிப்பினை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்திடவும் வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
திமுக அரசு ஆட்சி அமைத்து மூன்று ஆண்டுகள் ஆனபோதும், சிறுபான்மை சமூக மக்களுக்கு குறிப்பாக சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினருக்கு குறிப்பிடத்தக்க எந்த திட்டத்தையும், அது பொருளாதார திட்டமாக இருந்தாலும், பிரதிநிதித்துவம் சார்ந்த ஒன்றாக இருந்தாலும், இந்த அரசு எதனையும் செயல்படுத்தவில்லை. மட்டுமல்லாமல் சிறுபான்மை சமூக மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதிலும், சிறுபான்மை சமூகம் சார்ந்த திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. 20 ஆண்டுகள் சிறை தண்டனையை கடந்த முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை நடவடிக்கையிலும் பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு 10 பேர் மட்டுமே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மீதமுள்ள 26 பேர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. அதேபோல் பள்ளிவாசல்கள் தேவாலயங்கள் கட்டுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை சரிசெய்து, அதனை எளிமைப்படுத்திட சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தபோதும், ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆன நிலையிலும் அதுதொடர்பான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அதேபோல் இடஒதுக்கீடு கோரிக்கையும், பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட உயர் பொறுப்புகளில் முஸ்லிம்களையும் நியமித்திட வேண்டும் என்கிற கோரிக்கையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இப்படியாக ஏராளமான சிறுபான்மை முஸ்லிம் சமூகம் சார்ந்த கோரிக்கைகள் திமுக அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ளன.
சிறுபான்மை சமூக மக்களின் கோரிக்கைகளுக்காக களத்தில் தொடர்ந்து அக்கறையோடு போராடும் சிறுபான்மை சமூக பிரதிநிதிகளை, அமைப்புகளை புறக்கணித்துவிட்டு நடத்துகின்ற இக்கூட்டம், தாமதமான ஒன்றாக இருந்தாலும் கூட, தொடர்ந்து ஏமாற்றமான அறிவிப்புகளை திமுக அரசு செய்து வந்தாலும் கூட, எஸ்டிபிஐ கட்சியின் மாநாடு, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் சிறுபான்மை சமூக மக்களின் கோரிக்கைகளுக்கான ஆதரவு போன்றவை மூலம், சிறுபான்மை சமூக மக்களை அழைத்து பேச வேண்டும் என்கிற இடத்திற்கு நகர்ந்துள்ள அரசின் முடிவை, முஸ்லிம் சமூகத்தின் கோரிக்கைகளை வெல்ல சாதகமான ஒன்றாக எஸ்டிபிஐ பார்க்கிறது.
ஆகவே, நாளைய தினம் நடைபெறும் கூட்டம் உப்பு சப்பு இல்லாத கூட்டமாக நடத்திடாமல், சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றும் கூட்டமாக அது அமைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.