மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
Author: kavin kumar1 February 2022, 9:21 pm
சென்னை : இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 21 பேரையும், உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை கடற்படையால் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்ட 55 தமிழக மீனவர்கள் சமீபத்தில் தான் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் கச்சத்தீவு அருகே நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 21 மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அவ்ர்களை, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும் மீனவர்களிடம் இருந்து 2 விசைப்படகுகளையும், இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.கைதுசெய்யப்பட்ட 21 தமிழக மீனவர்களும், இலங்கை பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிப்ரவரி 7-ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தமிழக மீனவர்கள் 21 பேரையும் விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும், மீனவர்களுடன் பறிமுதல் செய்யப்பட்ட 2 விசைப்படகுகளையும் உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும், அவர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் இந்திய-இலங்கை மீனவர்களுக்கு இடையேயான பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வுகான வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.